search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெங்காயம்
    X
    வெங்காயம்

    வெங்காயம் விலை தொடர்ந்து உச்சம்

    பல்லாரி, சாம்பார் வெங்காயம் விலை தொடர்ந்து உச்சத்தில் இருக்கிறது என்றும், ஜனவரி மாதம் முதல் வாரத்தில் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
    சென்னை:

    வெங்காயம் விலை உயர்வு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் இதன் உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், அதற்கு மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர். ஆந்திரா, கர்நாடகா மற்றும் நாசிக் பகுதிகளில் இருந்து தமிழகத்துக்கு வெங்காயம் வரத்து இருந்து வருகிறது.

    குறிப்பாக இந்த பகுதிகளில் இருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு 90 லாரிகளில் பல்லாரி வெங்காயம் வரத்து இருந்த நிலையில், தற்போது வரத்து பாதிக்கு பாதியாக குறைந்துவிட்டது. இதன் காரணமாகவே விலை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. தரத்துக்கு ஏற்றவாறு பல்லாரி வெங்காயம் விற்பனை ஆகிறது.

    நாசிக் வெங்காயம் ஒரு கிலோ ரூ.100-க்கும், கர்நாடகாவில் இருந்து வரும் வெங்காயம் ரூ.80-க்கும், ஆந்திராவில் இருந்து வரும் வெங்காயம் ரூ.60-க்கும் கோயம்பேட்டில் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது அதனோடு சேர்ந்து சாம்பார் வெங்காயத்தின் விலையும் எகிறி இருக்கிறது. தமிழகத்தில் விளைச்சல் குறைவினால் தற்போது ஒரு கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    பல்லாரி, சாம்பார் வெங்காயம் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்தே வருகிறது. மொத்த மார்க்கெட்டில் இந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டாலும், சில்லரை விற்பனை கடைகளில் இதைவிட கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை அதிகரித்து விற்பனை செய்கிறார்கள்.

    தற்போதைய நிலவரப்படி வெங்காயம் விலை குறைவதற்கான வாய்ப்பு இல்லை என்றும், ஜனவரி மாதம் முதல் வாரத்தில் வெங்காயம் வரத்து வந்ததும் அதன் விலை பழைய நிலைக்கு வரும் என்றும் கோயம்பேடு காய், கனி, மலர் மொத்த வியாபாரிகள் சங்க பொருளாளர் சுகுமார் தெரிவித்தார்.

    கடந்த வாரத்தில் அதிரடியாக உயர்ந்து இருந்த முருங்கைக்காய் விலை சற்று குறைந்து இருக்கிறது. தாராபுரம், தேனி, சிதம்பரம், ஒட்டன்சத்திரம், நெல்லை ஆகிய பகுதிகளில் இருந்து முருங்கைக்காய் வரத்து முற்றிலும் இல்லாததால் விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.270 வரை விற்பனை ஆனது.

    அகமதாபாத்தில் இருந்து மட்டும் தற்போது முருங்கைக்காய் வரத்து இருக்கிறது. அங்கிருந்து வரத்து சற்று அதிகரித்து இருப்பதால், அதன் விலை குறைந்து ஒரு கிலோ ரூ.170 முதல் ரூ.180-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆந்திரா பகுதிகளில் இருந்து முருங்கைக்காய் வரத்து அதிகமானதும் மேலும் விலை குறையும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.


    Next Story
    ×