search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்டி, படுக்கைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்ட நர்சிங் பள்ளி மாணவிகள்.
    X
    பெட்டி, படுக்கைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்ட நர்சிங் பள்ளி மாணவிகள்.

    திண்டுக்கல்லில் இன்று நர்சிங் மாணவிகள் திடீர் மறியல்

    திண்டுக்கல்லில் இன்று நர்சிங் மாணவிகள் பெட்டி, படுக்கையுடன் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் அரசு மருத்துவக்கல்லூரி கட்ட அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இதற்காக திண்டுக்கல்லை அடுத்த ஒடுக்கம் பகுதியிலும், அரசு மருத்துவமனை வளாகத்திலும் புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. இதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் நடந்து வருகிறது.

    திண்டுக்கல் அரசு மருத்துவமனை வளாகத்தில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளி உள்ளது. இதில் 150 க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்களில் ஏராளமானோர் அங்குள்ள விடுதியில் தங்கி படிக்கின்றனர். இவர்களது விடுதி போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் காணப்பட்டது. மழை பெய்தால் ஒழுகும் வகையிலும், கட்டிடங்கள் சேதமான நிலையிலும் காணப்பட்டன. கழிவறைகளில் போதிய தண்ணீர் வசதி இல்லை. இந்த நிலையில் புதிய கட்டிட பணிக்காக விடுதியை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    இதற்காக செவிலியர் பள்ளி மாணவிகளுக்கு எலும்பு முறிவு பிரிவு அருகே உள்ள கட்டிடத்தில் விடுதி ஏற்பாடு செய்தனர். ஆனால் இந்த பகுதியும் அடிப்படை வசதி இன்றி மோசமான நிலையில் காணப்படுகிறது. இதனால் செவிலியர் பள்ளி மாணவிகள் அங்கு செல்ல மறுத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் பெட்டி படுக்கைகளை கையில் எடுத்துக் கொண்டு அரசு மருத்துவமனை முன்பு உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்கள். தங்களுக்கு உரிய வசதியுடன் கூடிய மாற்று இடம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினார்கள். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது. இது பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். எனினும் தங்களுக்கு மாற்று இடம் கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனக் கூறியவாறு மாணவிகள் பெட்டி படுக்கையுடன் அங்கேயே அமர்ந்திருந்தனர். அப்போது பலத்த மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் மாணவிகள் ரோட்டிலேயே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 

    இதை தொடர்ந்து மருத்துவமனை கண்காணிப்பாளர் பொறுப்பு சுரேஷ்பாபு உண்டு உறைவிட மருத்துவ அதிகாரி சந்தனகுமார் ஆகியோர் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிலும் சமரசம் ஏற்படவில்லை. மாணவிகள் போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. 

    Next Story
    ×