
கோவை மாநகராட்சியில் 2 ஆயிரம் நிரந்தர துப்புரவு பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் தவிர ஆயிரத்து 500 பேர் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாநகராட்சியில் காலியாக உள்ள 549 நிரந்தர துப்புரவு பணியாளர் வேலைக்கு கோவை மாநகராட்சி விண்ணப்பங்களை வரவேற்றது. அதன்படி 7 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான நேர்காணல் கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதற்காக வந்த விண்ணப்பதாரர்கள் வெவ்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு தனித்தனியாக நேர்காணல் நடத்தப்பட்டன. சாமியானா போடப்பட்டு அதில் அழைப்பு கடிதம் வைத்திருந்தவர்கள் மட்டும் அமர வைக்கப்பட்டனர்.

ஆனால் நேர்காணலுக்கு வந்த 70 சதவீதம் பேர் குறைந்தபட்சம் எஸ்.எஸ்.எல்.சி. படித்திருந்தனர். மேலும் டிப்ளமோ, ஐ.டி.ஐ. படித்தவர்கள், பட்டதாரிகள், பட்டமேற்படிப்பு படித்தவர்கள், இரண்டு பட்டங்கள் பெற்றவர்கள் மற்றும் என்ஜினீயரிங் பட்டதாரிகளும் குவிந்தனர்.
நேர்காணல் நேற்று காலை முதல் மாலை வரை நடைபெற்றது. நேர்காணல் தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) வரை நடக்கிறது.
மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கில் விண்ணப்பதாரர்கள் வந்ததால் அவர்களை கட்டுப்படு்த்த போலீசார் குவிக்கப்பட்டனர்.