search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வடசேரியில் காதல் திருமணம் செய்தவரை கடத்தி கொல்ல முயற்சி- பிரபல ரவுடி கைது

    வடசேரியில் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தவரை கடத்தி கொல்ல முயன்ற பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை சி.டி.எம்.புரம் பகுதியை சேர்ந்தவர் நீல தங்கம் (வயது 34) தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த சில வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக நீல தங்கம் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

    இதனால் நீல தங்கத்திற்கும், பெண் வீட்டாருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று பகல் நீல தங்கம் வடசேரி பஸ்நிலையம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் 7 பேர் வந்தனர். அவர்கள் நீல தங்கத்திடம் தகராறு செய்து அவரை தாக்கினார்கள். பிறகு மோட்டார் சைக்கிளில் அவரை கடத்திக் கொண்டு தாழக்குடி, பூதப்பாண்டி ஆகிய பகுதிகளுக்கு கொண்டு சென்றனர்.

    பூதப்பாண்டியில் வைத்து அவரை அந்த கும்பல் மீண்டும் தாக்கியது. மேலும் அரிவாளால் அவரை வெட்டி கொல்ல முயற்சி செய்தனர். இதனால் நீல தங்கம் கூச்சல் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு பொதுமக்கள் திரண்டனர்.

    இதைப்பார்த்ததும் அந்த கும்பல் நீலதங்கத்தை விடு வித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. கும்பலால் தாக்கப்பட்ட நீல தங்கம் காயம் அடைந்ததால் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மேலும் இதுபற்றி அவர் வடசேரி போலீசிலும் புகார் செய்தார்.

    போலீசார் இந்த சம்பவம் பற்றி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது நீல தங்கத்தை கடத்தி கொல்ல முயன்றது பிரபல ரவுடியான மணிகண்டன் மற்றும் அவரது கூட்டாளிகள் 6 பேர் என்பது தெரியவந்தது. நீல தங்கத்தின் மனைவி, மணிகண்டனின் உறவினர் ஆவார். மனைவியை நீல தங்கம் பிரிந்து வாழ்வதால் அவர் மீது ஏற்பட்ட கோபத்தில் அவரை கடத்தி தாக்கியதும் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து மணிகண்டன் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடிவந்தனர்.

    பறக்கை பகுதியை சேர்ந்தவர் கணபதி (32). மாற்றுத் திரனாளியான இவர் சுசீந்திரம் பகுதியில் தாமரை பூ பறித்து விற்பனை செய்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் நாகர்கோவில் வந்துவிட்டு சுசீந்திரம் சென்று கொண்டிருந்தார். அப்போது பறக்கை சந்திப்பில் அவரை மணிகண்டன் வழிமறித்து தகராறு செய்தார். அவரை கொலை செய்வதாக மிரட்டி அவரிடம் இருந்த ரூ.500-ஐ பறித்து விட்டு தப்பிச் சென்றுவிட்டார்.

    இதுபற்றி சுசீந்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக் டர் ரவிச்சந்திரன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் பறக்கை பகுதியில் வைத்து மணிகண்டனை சுசீந்திரம் போலீசார் கைது செய்தனர். அவரது கூட்டாளிகளை போலீசார் தேடிவருகிறார்கள். சுசீந்திரம் போலீஸ் நிலையம் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் மணிகண்டன் மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×