search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    திருமதி அழகி பட்டம் வென்ற கோவை பெண் மீது அவதூறு பரப்பிய தி.மு.க. நிர்வாகி சிறையில் அடைப்பு

    திருமதி அழகி பட்டம் வென்ற கோவை பெண் மீது அவதூறு பரப்பிய திமுக நிர்வாகி சிறையில் அடைக்கப்பட்டதையடுத்து மேலும் 4 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
    கோவை:

    கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் சோனாலி பிரதீப். இவர் திருமணமானவர்களுக்கான அழகி போட்டியில் கலந்து கொண்டு மிஸ் இந்தியா யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார்.

    இவர் தற்போது அ.தி.மு.க.வில் உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில் சோனாலி பிரதீப் கோவை சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார். அதில் கூறி இருப்பதாவது-

    அழகி பட்டம் வென்ற நான் தற்போது அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியராக வகுப்புகள் எடுத்து வருகிறேன். மேலும் சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறேன்.

    இந்த நிலையில் சமூக வலை தளங்களை நான் பார்த்த போது சிலர் ஆபாசமாக என்னை சித்தரித்து தகாத வார்த்தைகளை பதிவிட்டு இருந்தனர். இதனை கண்டு மன உளைச்சலும் அவமானமும் அடைந்தேன்.

    குடும்பத்தினர் மத்தியில் அவப் பெயரை உண்டாக்கிய இந்த பதிவுகளை சமூக வலை தளங்களில் இருந்து நீக்குவதுடன் அந்த பதிவுகளை பதிவேற்றம் செய்த நபர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு புகாரில் கூறி இருந்தார்.

    இந்த புகார் குறித்து சாய்பாபா காலனி போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது சோனாலி பிரதீப் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியது ஈரோடு மாவட்டம் குமணன் குட்டை செல்வம் நகரை சேர்ந்த ரகுபதி (32) என்பது தெரிய வந்தது.

    இவர் அப்பகுதியில் 20-வது வார்டு தி.மு.க. உறுப்பினராக உள்ளார். அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    ரகுபதி மீது அவதூறு பரப்புதல், தகவல் தொழில் நுட்ப சட்ட பிரிவு, பெண் வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது சோனாலி பிரதீப் குறித்து பேஸ்புக், டுவிட்டரில் அவதூறு தகவல் பதிவிட்டதாக சபீர்கான், ரசாயா அப்துல் வகாப், தளபதி பட்டேல், ரவி ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

    அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×