
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. ராட்சத அலைகள் எழும்பி வருகின்றன. இதனால் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
மேலும் இலங்கை கடற்படையால் அடிக்கடி தாக்குதலுக்குள்ளாவதை தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கை வசம் உள்ள இந்திய படகுகளை மீட்க வேண்டும்.
இதுகுறித்து இந்தியா வர உள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேயிடம் மத்திய அரசு பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்த விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம் தொடங்கி உள்ளதால் அவர்களும் கடலுக்குச் செல்லவில்லை.
இதனால் 100-க்கும் குறைவான சிறிய படகுகளே மீன்பிடிக்கச் சென்று வருகின்றன. தங்கச்சி மடத்தைச் சேர்ந்த அலெக்சாண்டர் என்பவரது படகில் குமார், அலெக்ஸ், கோபி, நாகூரான் ஆகியோர் கடலுக்குச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீன் பிடித்தபோது திடீரென கடலில் சீற்றம் ஏற்பட்டது.
அலைகள் வேகமாக எழும்பியதால் படகு தத்தளித்தது. சிறிது நேரத்தில் அந்த படகு சேதமடைந்து தண்ணீரில் மூழ்கியது. அதில் இருந்த 4 மீனவர்களும் தத்தளித்தனர்.
அப்போது அந்த பகுதியில் இருந்த விசைப்படகு மீனவர்கள் விரைந்து சென்று கடலில் தத்தளித்த 4 மீனவர்களையும் மீட்டனர். அவர்கள் நேற்று நள்ளிரவில் பத்திரமாக கரை திரும்பினர்.
மீட்கப்பட்ட மீனவர்களிடம் மீன்வளத்துறையினரும் போலீசாரும் விசாரணை நடத்தினர்.