search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெங்காயம்
    X
    வெங்காயம்

    வெங்காயம் விலை சதம் அடித்தது - பொதுமக்கள் அதிர்ச்சி

    கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிலேயே வெங்காயம் விலை ரூ.100-ஐ தொட்டு சதம் அடித்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    சென்னை:

    சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு மகாராஷ்டிரா (சோலாபூர், புனே), கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து 60 லாரிகள் வரை வெங்காயம் கொண்டு வரப்படுகின்றன. தொடர் மழை மற்றும் சரிவர விளைச்சல் இல்லாததால் விவசாயிகளின் கையிருப்பில் உள்ள வெங்காயமே வந்துகொண்டிருந்தன.

    தற்போது சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 30 லாரிகள் வரையே வெங்காயம் கொண்டு வரப்படுகின்றன. விளைச்சல்-வரத்து குறைவு எதிரொலியாக வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.

    சாம்பார் வெங்காயம்

    ஓரிரு நாட்களுக்கு முன்பு வெங்காயம் ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை ஆனது. தற்போது கோயம்பேடு மார்க்கெட்டிலேயே வெங்காயம் விலை ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனை ஆகிறது. ஆந்திரா வெங்காயம் (தரம் குறைந்தது) ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை ஆகிறது. சாம்பார் வெங்காயமும் ரூ.80 முதல் ரூ.100-க்கு விற்பனை ஆகிறது.

    இதுகுறித்து சென்னை கோயம்பேடு அனைத்து வியாபாரிகள் நலவாழ்வு சங்கத்தின் செயலாளர் எம்.அப்துல்காதர் கூறியதாவது:-

    வியாபாரம் மந்தம் காரணமாக இந்த வாரம் வெங்காயம் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மகாராஷ்டிரத்தில் மீண்டும் தொடர்மழை காரணமாக வெங்காயத்தின் விளைச்சல் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விளைச்சல்-வரத்து மிகுதியாக பாதித்து, வெங்காயம் விலை இன்னும் உயர்ந்திருக்கிறது. அழுகும் பொருட்களில் விலையை உடனடியாக தீர்மானிக்க முடியாது. ஓரிரு நாளில் விலையில் மாறுபாடு ஏற்படலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோயம்பேடு மார்க்கெட்டிலேயே வெங்காயம் விலை சதம் அடித்துள்ளது. இதனால் தெருவோர கடைகள், சூப்பர் மார்க்கெட்களில் இன்னும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வார்களே என்று பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்கவும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    Next Story
    ×