search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்விசிறியில் பொருத்தப்பட்டுள்ள ஸ்பிரிங்
    X
    மின்விசிறியில் பொருத்தப்பட்டுள்ள ஸ்பிரிங்

    ஐஐடி விடுதி மின்விசிறிகளில் ‘ஸ்பிரிங்’ தொழில்நுட்பம் பொருத்தம்

    சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை சம்பவம் எதிரொலியாக, ஐ.ஐ.டி. விடுதிகளில் உள்ள மின்விசிறிகளில் ‘ஸ்பிரிங்’ தொழில்நுட்பத்தை பொருத்தும் பணி நடக்கிறது. அதை கண்காணிக்க குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    கேரள மாநிலத்தை சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் (வயது 20), சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வந்தார். இவர் கடந்த 8-ந்தேதி இரவு தனது விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தன்னுடைய சாவுக்கு காரணமானவர்களின் விவரத்தையும் செல்போனில் குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு தரப்பினரும் இதற்கு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தும், வலியுறுத்தியும் வந்தனர். அதன்படி, தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாணவியின் தற்கொலை சம்பவம் எதிரொலியாக சென்னை ஐ.ஐ.டி. விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகளில் புதிய தொழில்நுட்பத்தை பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது.

    அதாவது, மின்விசிறியில் ‘ஸ்பிரிங்’ முறையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளனர். இதற்கு ‘பேன் பு‌‌ஷ் புரொடெக்சன் டிவை‌‌ஷ்’ என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த ‘ஸ்பிரிங்’ முறையில் மின்விசிறியின் எடைக்கு அதிகமாக வேறு கூடுதல் எடை இருக்கும் பட்சத்தில் கீழ்நோக்கி வந்துவிடும். எனவே மின்விசிறியில் தற்கொலை முயற்சி செய்ய முடியாது.

    இது தற்போது கொண்டு வரப்பட்ட திட்டம் அல்ல. ஏற்கனவே ஐ.ஐ.டி. வளாகத்தில் தற்கொலை சம்பவங்கள் நடந்த போது, இந்த முறையை நடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டு, அதற்கான பணிகள் நடந்தது. பின்னர் நாளடைவில் அந்த பணியில் தொய்வு ஏற்பட்டுவிட்டது.

    இந்தநிலையில் மாணவி பாத்திமா லத்தீப், மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பூதாகரமாக வெடித்த உடன் மீண்டும் ஐ.ஐ.டி. நிர்வாகம் விழித்து கொண்டுள்ளது.

    சென்னை ஐ.ஐ.டி.யில் படிக்கும் மாணவ-மாணவிகள் தங்குவதற்கு வசதியாக வளாகத்தில் ஏராளமான விடுதி அறைகள் உள்ளன. அந்த விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகளில் சிலவற்றில் இந்த தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள விடுதி அறைகளிலும் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுவதை கண்காணிக்க குழுவையும் ஐ.ஐ.டி. நிர்வாகம் அமைத்து இருக்கிறது.

    அந்த குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகளில் ‘ஸ்பிரிங்’ முறை தொழில்நுட்பம் பொருத்துவதை கண்காணிக்க வேண்டும் என்றும், இந்த பணிகளை அடுத்த மாதம்(டிசம்பர்) 20-ந்தேதிக்குள்(குளிர்கால விடுமுறை முடிவதற்குள்) செய்து முடிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பணிகளை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவினரிடம் கேட்டபோது, ‘இந்த தகவல் உங்களுக்கு எதற்கு?’ என்று கேள்வி எழுப்பினர். விடுதியில் தங்கி இருக்கும் மாணவர்கள் கூறுகையில், ‘ஏற்கனவே இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்திவிட்டு, அதன்பின் பணிகள் நடக்கவில்லை’ என்று குற்றம் சாட்டினர்.
    Next Story
    ×