search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மெரினா கடற்கரையில் போலீஸ் எச்சரிக்கையை மீறி வாலிபர்கள் ‘பைக்’ ரேஸ்

    சென்னை மெரினா கடற்கரையில் போலீஸ் எச்சரிக்கையை மீறி வாலிபர்கள் ‘பைக்’ ரேசில் ஈடுபட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
    சென்னை:

    சென்னையில் கிழக்கு கடற்கரை சாலை, மெரினா கடற்கரை சாலை மற்றும் வெளி வட்ட பைபாஸ் சாலைகளில் ஆட்டோ ரேஸ் மற்றும் பைக் ரேஸ் நடந்து வருகிறது.

    ரேசில் செல்பவர்களால் ஏற்படும் விபத்தில் பொது மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ரேஸ்களை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தும் கட்டுப்படுத்த முடியவில்லை.

    வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரேஸ்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதில் பல லட்சம் வரை பணம் பந்தயமாக கட்டப்படுகிறது.

    இந்த ரேஸ் சூதாட்டத்தில் பங்கேற்பதற்காக பக்கத்து மாநிலங்களில் இருந்தும் ரேசர்கள் பங்கேற்பதற்காக கூறப்படுகிறது. அவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று இரவு மெரினா கடற்கரையில் 10-க்கும் மேற்பட்டோர் பைக் ரேசில் ஈடுபட்டனர். அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு பைக்கின் முன்பக்க சக்கரத்தை தூக்கிய படி சீறிப்பாய்ந்தனர்.

    இதனை கண்டு அந்த சாலையில் சென்ற வாகன ஓட்டிகளும், பொது மக்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் வருவதற்குள் பைக் ரேசர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

    இதேபோல் மெரினா கடற்கரையில் பைக் ரேஸ்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. போலீசாரின் கடும் எச்சரிக்கையையும் மீறி அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். ரேசில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரவாயல் அருகே ஆட்டோ ரேசில் ஈடுபட்ட மெக்கானிக் ஒருவர் விபத்தில் சிக்கி பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×