search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கார் மீது பெட்ரோல் குண்டு வீசி டிரைவர் கொலை - தீக்காயம் அடைந்த தொழில் அதிபர் மனைவியும் பலி

    கார் மீது லாரியை மோத விட்டு பெட்ரோல் குண்டு வீசி டிரைவரை கொலை செய்த சம்பவத்தில் தீக்காயம் அடைந்த தொழில் அதிபர் மனைவியும் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இது தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ராயக்கோட்டை:

    கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் ஆனந்த்பாபு (வயது 46). இவர் உத்தனப்பள்ளி அருகே நாயக்கனப்பள்ளியில் அட்டை பெட்டி தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது மனைவி நீலிமா (42). கடந்த 11-ந் தேதி ஆனந்த்பாபுவும், நீலிமாவும் காரில் கம்பெனிக்கு சென்றனர். பின்னர் இரவு 8 மணி அளவில் நீலிமா கம்பெனியில் இருந்து வீட்டிற்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அந்த காரை கெலமங்கலம் அருகே உள்ள எச்.செட்டிப்பள்ளியைச் சேர்ந்த டிரைவர் முரளி (25) என்பவர் ஓட்டிச் சென்றார்.

    சானமாவு அருகில் கார் வந்த போது எதிரே வந்த லாரி கார் மீது மோதியது. இதில் காரும், லாரியும் தீப்பிடித்து எரிந்ததாக கூறப்பட்டது. இந்த சம்பவத்தில் டிரைவர் முரளி உடல் கருகி பலியானார். உடன் சென்ற நீலிமா பலத்த தீக்காயம் அடைந்தார். அவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இது தொடர்பாக உத்தனப்பள்ளி போலீசார் நடத்திய விசாரணையில் அது விபத்து அல்ல, திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என தெரிய வந்தது. தொழில் அதிபர் ஆனந்த்பாபு, அவரது மனைவி நீலிமா ஆகியோரை கொலை செய்ய அவரது உறவினர் ஓசூரைச் சேர்ந்த தொழில் அதிபர் ராமமூர்த்திக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொழில் போட்டி காரணமாக ஆனந்த்பாபு, அவரது மனைவி நீலிமா ஆகியோரை கூலிப்படை வைத்து லாரியால் காரை மோத விட்டு பின்னர் பெட்ரோல் குண்டுகளை கார் மீது எரிந்ததும், இதில் டிரைவர் முரளி பலியானதும் தெரிய வந்தது.

    முதலில் விபத்து வழக்காக பதிவு செய்திருந்த போலீசார் பின்னர் இதை கொலை வழக்காக மாற்றினார்கள். இதில் மதுரையை சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் மகராஜன் (40) கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

    ஓசூர் பேரண்டப்பள்ளி கங்காபுரத்தை சேர்ந்த ஆனந்தன், ஓசூர் தின்னூர் அருகே உள்ள ஆலூரை சேர்ந்த திம்மப்பா என்பவரின் மகன் சாந்தகுமார் (22) ஆகிய 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்களில் ஆனந்தன் கூலிப்படையை அழைத்து வந்தது, கொலை நடந்த இடத்தில் உதவியது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

    சாந்தகுமார், நீலிமா காரில் வருவதை கண்காணித்து கூலிப்படைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இவர்களை தவிர மதுரையை சேர்ந்த லாரியின் உரிமையாளர் நீலமேகம் என்பவரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் பெட்ரோல் குண்டு வீச்சில் பலத்த தீக்காயம் அடைந்து பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழில் அதிபரின் மனைவி நீலிமா நேற்று மாலை சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதனால் இந்த வழக்கை இரட்டை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகிறார்கள்.

    இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்டது மதுரையை சேர்ந்த ஒரு வக்கீல் ஆவார். மதுரையில் இருந்து கூலிப்படையை அனுப்பி வைத்தது. கொலை நடந்து முடிந்ததும், விபத்து போல ஒரு டிரைவரை சரண் அடைய வைத்ததும் தெரியவந்தது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக தொழில் அதிபர் ராமமூர்த்தியையும், வக்கீலை 2-வது குற்றவாளியாகவும் சேர்க்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 3 பேர் கைதாகி உள்ளனர். தொழில் அதிபர் ராமமூர்த்தி, வக்கீலையும் சேர்த்து மொத்தம் 9 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    அவர்களில் 7 பேர் கூலிப்படையினர் ஆவார்கள். இவர்களுக்கு ரூ.50 லட்சம் வரையில் பணம் கைமாறி உள்ளது. இந்த கூலிப்படை சுமார் 2 மாதமாக ஓசூரில் தங்கியிருந்து தொழில் அதிபர் ஆனந்த்பாபுவையும், அவரது மனைவி நீலிமாவையும் கண்காணித்து ஒரே நேரத்தில் கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். கொலை நடந்த அன்று ஆனந்த்பாபு கம்பெனியில் வேலை இருந்ததால் நீலிமாவை மட்டும் காரில் அனுப்பி வைத்துள்ளார்.

    அந்த காரில் ஆனந்த்பாபு, அவரது மனைவி நீலிமா இருப்பதாக நினைத்தே கூலிப்படை பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இதில் டிரைவர் முரளியும் பலியாகி விட்டார். இந்த வழக்கில் கோபால் என்ற மற்றொரு குற்றவாளியையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×