search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழை நன்றாக பெய்தது. அதுபோல வடகிழக்கு பருவமழையும் தற்போது நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நன்றாக பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும், கடலோர பகுதியிலும் கனமழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக பாளையில் 46.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. நெல்லை, பாளை பகுதியிலும் விட்டு விட்டு கனமழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. நெல்லை சந்திப்பு பாலபாக்யா நகர், பாளை மனகாவலம்பிள்ளை நகர், அண்ணாநகர், மேல குலவணிகர்புரம் ஆகிய பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது. இதை மாநகராட்சி அதிகாரிகள் வெளியேற்றி வருகிறார்கள்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை வரை அதிகபட்சமாக திருச்செந்தூர் பகுதியில் 40 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் பரவலாக நேற்று இரவு வரை மழை பெய்துள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு குளங்கள் நிரம்பி வருகின்றன. தென்காசி மாவட்டத்தில் அதிகபட்சமாக தென்காசியில் 32.4 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் குற்றால அருவிகளில் தண்ணீர் அதிகமாக கொட்டுகிறது. அணைக்கட்டுகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன.

    மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 2,421 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்துள்ளது. நேற்று 134 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து, இன்று 137.05 அடியாக உள்ளது. அணை நிரம்ப இன்னும் 6 அடி மட்டுமே பாக்கி உள்ளது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 578 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 1645 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 35 கன அடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது. இதனால் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று 70 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து இன்று காலை 72.60 அடியானது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 147.80 அடியாக இருந்தது. அந்த அணை நீர்மட்டமும் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து இன்று காலை 149.87 அடியானது. சேர்வலாறு அணை நிரம்ப இன்னும் 6 அடி தண்ணீரே தேவை.

    தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் ஆகிய 5 அணைகளும் நிரம்பி விட்டன. நெல்லை மாவட்டத்தில் உள்ள வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு ஆகிய 3 அணைகள் மட்டுமே நிரம்பாமல் தண்ணீர் குறைவாக உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பாளை-46.4, மூலக்கரைப்பட்டி-45, சேர்வலாறு-44, பாபநாசம்-42, சேரன்மகாதேவி-39.4, மணிமுத்தாறு-34.8, நெல்லை-27, கன்னடியன்-26, நாங்குநேரி-21.3, கொடுமுடியாறு-20, அம்பை-19.4, களக்காடு-14.2, நம்பியாறு-10, ராதாபுரம்-5

    தென்காசி மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    தென்காசி-32.4, ராமநதி-27, ஆய்க்குடி-25, செங்கோட்டை-14, கடனாநதி-10, கருப்பாநதி-10, சங்கரன்கோவில்-5, சிவகிரி-5, குண்டாறு-5

    தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    திருச்செந்தூர்-40, கயத்தாறு-32, மணியாச்சி-31, காடல்குடி-22, காயல்பட்டினம்-21, சாத்தான்குளம்-19, ஸ்ரீவைகுண்டம்-18.2, குலசேகரப்பட்டினம்-18, கீழஅரசடி-16, கடம்பூர்-14, விளாத்திகுளம்-13, வைப்பார்-11, ஓட்டப்பிடாரம்-9, தூத்துக்குடி- 6.5, எட்டயாபுரம்-5, சூரங்குடி-5, வேடநத்தம்-3, கழுகுமலை-2 .

    Next Story
    ×