search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறப்பு பஸ்கள் (கோப்புப்படம்)
    X
    சிறப்பு பஸ்கள் (கோப்புப்படம்)

    திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவுக்கு 2,500 சிறப்பு பஸ்

    திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் தமிழகம் முழுவதும் இருந்து 2,500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    6-ந்தேதி வெள்ளி தேரோட்டம், 7-ந்தேதி பஞ்ச ரத தேரோட்டமும் நடக்கிறது, 10-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு பரண தீபம், மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

    தீபத்திருவிழா நடைபெறும் 10 நாட்களும் 25 முதல் 30 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலை வருவார்கள் என எதிர்பார்கப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு பவுர்ணமி கிரிவலம் 11-ந்தேதி காலை 11.10 மணிக்கு தொடங்கி, 12-ந்தேதி காலை 11.5 மணி வரை நடைபெறுகிறது. இந்த நேரத்தில் 5 லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என எதிர்பார்கப்படுகிறது.

    மகா தீப கொப்பரை சீரமைக்கும் பணி

    தீபத்திருவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. கோவிலில் உள்ள உற்சவ சிலைகளுக்கு வர்ணம் தீட்டப்பட்டுள்ளது. தேர்கள் சீரமைக்கப்பட்டு அலங்கார துணிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மகா தீப கொப்பரை சீரமைக்கப்பட்டு தயார் செய்து வருகின்றனர். நாளை திருவண்ணாமலையில் குபேரர் கிரிவலம் நடக்கிறது. இதனால் திருவண்ணாமலை கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.

    தீபத்திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக திருவண்ணாமலை நகரினை இணைக்கும் 9 சந்திப்பு சாலைகளிலும் 2420 பஸ்கள் நிறுத்தும் வகையில் 15 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்படுகிறது. மேலும், 85 இடங்களில் 24,000 கார்கள் நிறுத்துவதற்கான கார் பார்கிங் வசதி செய்யப்படுகிறது.

    இதற்கான முன்பதிவு இணையதளம் மூலம் செய்வதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்காலிக பஸ் நிலையங்கள் மற்றும் கார் பார்கிங் இடங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்களால் நடத்தப்படும் உணவகம், போலீஸ் மையம், அடிப்படை வசதிகள், கழிப்பறைகள், மின் விளக்குகள், மேற்கூரைகள், குடிநீர் வசதி செய்யப்படுகிறது.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் தமிழகம் முழுவதும் இருந்து 2,500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளது. சென்னையில் இருந்து மட்டும் 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். விழுப்புரம், திருச்சி, வேலூர் ஆகிய இடங்களில் இருந்து அதிகளவில் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து கிரிவலப்பாதைக்கு செல்ல 125 தொடர் மினிபஸ்கள் இயக்கப்படுகிறது. போக்குவரத்துத் துறை மூலமாக ஆட்டோ கட்டணம் 2.5 கி.மீ. வரை ரூ.20, அதற்கு மேல் ரூ.25 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    தென்னக ரெயில்வே மூலமாக 14 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் விழுப்புரம் மற்றும் வேலூர் மார்க்கமாக 650 கூடுதல் சிறப்பு பஸ்களும், சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட உள்ளது.

    சுகாதாரத்துறை மூலமாக கோவில் மற்றும் கிரிவலப் பாதையில் 13 நிலையான மருத்துவ முகாம்கள், 3 நடமாடும் மருத்துவ வாகனம், ஒரு தியேட்டர் ஆம்புலன்ஸ், 15 108 ஆம்புலன்ஸ், 16 இரு சக்கர ஆம்புலன்ஸ், 5 ஜம்ப் கிட், 34 தகவல் மையங்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது.

    8500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தீயணைப்புத் துறை மூலமாக 29 தீயணைப்பு வாகனங்கள், 447 தீயணைப்பு வீரர்கள் பணிபுரிய உள்ளார்கள். திருவண்ணாமலை மலை ஏறும் பாதைகளாக கண்டறியப்பட்டுள்ள 17 இடங்களில் 70 வனத்துறை அலுவலர்கள் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.

    மேலும், கோவிலுக்கு வெளியே 119 கேமராக்களும், உள்ளே 231 கேமராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், தீயணைப்பு அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆகிய 4 அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை ஏற்பாடு செய்யப்படுகிறது.

    பக்தர்களின் வசதிக்காக 600 கழிப்பறைகள், 400 தற்காலிக சிறுநீர் கழிக்கும் இடங்கள், திருவண்ணாமலை நகரத்தை இணைக்கும் 9 சந்திப்பு சாலைகளில் 42 இடங்களில் குளிக்கும் அறைகள் மற்றும் கழிப்பறை வசதியுடன் ஏற்பாடு செய்யப்படுகிறது.

    மேலும், அனைத்து குடிநீர் தொட்டிகளும் ஆழ்துளை கிணறுகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக் குழுவை சார்ந்த 3500 உறுப்பினர்கள் கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கு உதவி செய்யும் பணியிலும், பிளாஸ்டிக், உணவு தட்டுகள் வீசாமல் இருக்க அறிவுறுத்தும் பணியில் ஈடுபடவுள்ளனர். கிரிவலப் பாதையில் 375 இடங்களில் தற்காலிக குப்பை தொட்டிகள் அமைக்கப்படுகிறது. தூய்மை பணி மேற்கொள்வதற்கு 2600 துப்புரவு பணியாளர்கள் இதர உள்ளாட்சி அமைப்புகளிலிருந்து பணி அமர்த்தப்படுகிறார்கள்.

    கிரிவலப் பாதையில் கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் எந்தெந்த இடங்களில் உள்ளது என்பதற்கான வழிகாட்டுதல் பலகைகள் இணைப்பு சாலைகள் மற்றும் கிரிவலப் பாதை முழுவதும் வைக்கப்பட்டுள்ளது. அன்னதானம் வழங்குவதற்கு 7 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புத் துறை மூலமாக 9 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆவின் பூத் 34 இடங்களிலும், தகவல் மையங்கள் 34 இடங்களிலும் அமைக்கப்படுகிறது.

    பரணி தீபத்திற்கு 4000 நபர்களும், மகா தீபத்திற்கு 6000 நபர்களும் கட்டளைதாரர்கள் மற்றும் உபயதாரர்கள் அனுமதிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு கட்டண தரிசன டிக்கெட் ரூ.500 மற்றும் ரூ.600 கட்டணத்தில் 1100 நபர்களுக்கு இணையதளம் மூலம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், வரிசையில் நிற்கும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் 2000 நபர்கள் பரண தீபத்திற்கும், 2500 பேர்கள் மகா தீபத்திற்கும் கோவிலுக்குள் அனுமதிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் துணிப்பை கொண்டு வரும் பக்தர்களுக்கு குலுக்கல் முறையில் 12 நபர்களுக்கு தங்க நாணயம், 72 நபர்களுக்கு வெள்ளி நாணயம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், 3 இடங்களில் துணிப் பைகள் வழங்குவதற்கும், 5 இடங்களில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப் பைகள் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

    கால்நடை சந்தை, வாகனம் நிறுத்துமிடங்கள், தொடர் பஸ் சேவை, சிறுவியாபாரிகள் என எதற்கும் வரிகள் உள்ளிட்ட எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. கோவில் மற்றும் கிரிவலப் பாதையில் கற்பூரம் ஏற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகமாக கற்பூரம் ஏற்றும் 3 இடங்கள் கண்டறியப்பட்டு அந்த இடங்களில் தீயணைப்பு துறையின் சிறிய வாகனம் நிறுத்தப்பட உள்ளது.

    பக்தர்களின் வசதிக்காக 10 இடங்களில் அவர்கள் கொண்டு வரும் பொருட்களை வைப்பதற்கான கட்டணமில்லா அறைகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. மகா தீபத்தின் போது மலை ஏறுவதற்கு 2500 பக்தர்களுக்கு மட்டும் மாவட்ட நிர்வாகம் மூலம் அனுமதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×