search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சப் இன்ஸ்பெக்டர் விபல்குமார்
    X
    சப் இன்ஸ்பெக்டர் விபல்குமார்

    சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை- உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்

    புதுவை நெட்டப்பாக்கத்தில் தற்கொலை செய்து கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டன.

    சேதராப்பட்டு:

    புதுவை நெட்டப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் விபல்குமார் (வயது 40). இவர், போலீஸ் நிலையத்தில் உள்ள ஓய்வறையில் நேற்று காலை தங்கி இருந்தார். அங்கு திடீரென அவர் கயிற்றில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

    விபல்குமாரின் சொந்த ஊர் வில்லியனூர் அருகே உள்ள தொண்டமாநத்தம் ஆகும்.

    இவரது தந்தை பாலு. முன்னாள் ராணுவ வீரர். விபல்குமார் தாகூர் கலை கல்லூரியில் படித்து பி.எஸ்.சி. பட்டம் பெற்றார். அதன்பிறகு போலீஸ் துறையில் வேலை கிடைத்தது. 2 ஆண்டுகள் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார்.

    2011-ம் ஆண்டு நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் கலந்து கொண்ட அவர் அதில் வெற்றி பெற்று சப்-இன்ஸ்பெக்டராக தேர்வு செய்யப்பட்டார். முதலில் திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றினார். அதன் பின்னர் மாகிக்கு மாற்றப்பட்டார்.

    அங்கு 3 ஆண்டுகள் பணிபுரிந்த நிலையில் நெட்டப்பாக்கம் சப்-இன்ஸ் பெக்டராக பணிமாற்றம் செய்யப்பட்டார்.

    இவரது மனைவி பெயர் கிருஷ்ணபிரியா. 2012-ம் ஆண்டு அவர்களுக்கு திருமணம் நடந்தது. நவீன் பாரதி (6), விஷ்வஜித் (4) ஆகிய குழந்தைகள் உள்ளனர்.

    விபல்குமார் தற்கொலைக்கான காரணம் என்ன என்று இதுவரை தெளிவாக தெரியவில்லை. அவர் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் உயர் அதிகாரிகள் முன்னிலையில் நேற்று மதியம் உடலை கீழே இறக்கினார்கள்.

    அதன்பிறகு அறை முழுவதும் சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு டைரியில் 4 பக்கத்துக்கு விபல்குமார் கடிதம் எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தில் என்ன எழுதப்பட்டு இருந்தது என்ற விவரத்தை போலீசார் வெளியிடவில்லை.

    ஆனால், தனக்கு உடல் நிலை சரியில்லை. அதன் காரணமாக தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதுதான் உண்மையான காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று தெரியவில்லை.

    இன்று காலை கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அவரது உடல் பிரேத பரிசோதனை நடப்பதாக இருந்தது. அப்போது அவருடைய தந்தை பாலு, விபல்குமார் மனைவி கிருஷ்ணபிரியா மற்றும் உறவினர்கள், நண்பர்கள் ஏராளமானோர் ஆஸ்பத்திரியில் திரண்டனர்.

    அவர்கள் விபல்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது. சாவில் மர்மம் இருக்கிறது என்று கூறினார்கள்.

    தந்தை பாலு இதுபற்றி கூறும்போது, எனது மகன் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. உயர் போலீஸ் அதிகாரி ஒருவரால் எனது மகன் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் கொடுமைப்படுத்தப்பட்டான். இதன் பின்னணியில் தான் இந்த சாவு நிகழ்ந்துள்ளது.

    எனவே, இதுபற்றி முழுமையாக விசாரிக்க வேண்டும். முதல்-அமைச்சரும், டி.ஜி.பி.யும் நேரில் வந்து பார்த்து எங்களுக்கு உரிய உத்தரவாதம் தர வேண்டும். அதுவரை பிரேத பரிசோதனை செய்யக் கூடாது என்று கூறினார்.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆஸ்பத்திரி முன்பு வழுதாவூர் சாலையில் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உயர் அதிகாரிகள் சமரசப்படுத்தியதை அடுத்து மறியலை கைவிட்டனர். ஆனாலும், பிரேத பரிசோதனை இன்று காலை நடக்க வில்லை.

    விபல்குமார் தற்கொலைக்கான காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது.

     சப் இன்ஸ்பெக்டரின் உறவினர்கள் கதிர்காமம்- வழுதாவூர் சாலையில் மறியலில் ஈடுபட்ட காட்சி

    இது சம்பந்தமாக அவருடைய மனைவி கிருஷ்ணபிரியாவிடம் கேட்டபோது, அவருக்கு வயிற்று ஜீரண பிரச்சினை இருந்தது உண்மைதான். இதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டார்.

    அவர் தற்கொலைக்கு இது நிச்சயம் காரணம் இல்லை. கடன் தொல்லையோ, வேறு விதமான குடும்ப பிரச்சினையோ இல்லை. அவர் சாவில் மர்மம் இருக்கிறது. இதுபற்றி முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார்.

    புதுவை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் இன்று கதிர்காமம் ஆஸ்பத்திரிக்கு வந்தார். அப்போது சப்- இன்ஸ்பெக்டர் விபல் குமாரின் தந்தை பாலு, ராகுல் அல்வாலிடம் எனது மகனின் சாவுக்கு உயர் போலீஸ் அதிகாரிதான் காரணம். அவரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    Next Story
    ×