search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.கே.வாசன்
    X
    ஜி.கே.வாசன்

    உள்ளாட்சி தேர்தலில் த.மா.கா.வுக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்களை கேட்டு பெறுவோம்- ஜி.கே.வாசன்

    உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி தலைவர்களிடம் பேசி த.மா.கா.வுக்கான வெற்றி வாய்ப்புள்ள இடங்கள் கேட்டு பெறப்படும் என்று அதன் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
    திருச்சி:

    திருச்சியில் இன்று த.மா.கா.சார்பில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கோவை தங்கம், விடியல் சேகர், நெசவாளர் அணி தலைவர் ராஜேஷ் மற்றும் 32 கட்சி மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்களுடன் உள்ளாட்சி தேர்தலில் த.மா.கா.வுக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்கள் என்னென்ன? என்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது நிர்வாகிகள் வெற்றி வாய்ப்புள்ள இடங்கள் அடங்கிய பட்டியலை ஜி.கே.வாசனிடம் அளித்தனர்.

    பின்னர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியுடன் இணைந்து த.மா.கா. போட்டியிட உள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் உள்ளிட்ட இடங்களில் த.மா.கா.வுக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்கள் எவை என்பது பற்றி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

    மற்ற மாவட்டங்களில் உள்ள நிலவரம் குறித்து வருகிற 28-ந்தேதி சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். வெற்றி வாய்ப்புள்ள பட்டியலை கட்சி தலைமைக்கு வருகிற 30-ந்தேதிக்குள் அனுப்பும்படி தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் அ.தி.மு.க. கூட்டணி தலைவர்களிடம் பேசி த.மா.கா.வுக்கான வெற்றி வாய்ப்புள்ள இடங்கள் கேட்டு பெறப்படும். மழைக் காலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதால் ஆளும்கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என்பதை ஏற்க முடியாது. எதிர்க்கட்சிகள் என்றால் ஆளும் கட்சி மீது குறைகளை கூறி கொண்டுதான் இருப்பார்கள்.

    உள்ளாட்சி தேர்தலில் மேயரை மறைமுகமாக தேர்வு செய்வது சரியில்லை என்று கூறுவது ஏற்புடையதல்ல. தி.மு.க.வும் அது போல் நடத்தியுள்ளது. 15 மாநகராட்சி உள்பட அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க. கூட்டணிதான் வெற்றி பெறும்.

    எடப்பாடி பழனிசாமி ஆட்சியை சிறப்பாக நடத்தி கொண்டிருக்கிறார். அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது. இதன் மூலம் சிறுபான்மை மக்களுக்குஅளித்த வாக்குறுதிக்கும், நம்பிக்கைக்கும் துரோகம் இழைத்து விட்டது. இனி மதசார்பின்மை பற்றி பேச காங்கிரசுக்கு தகுதி கிடையாது. இதன் முடிவு தமிழகத்திலும் எதிரொலிக்கும்.

    ரஜினி-கமல் இணைந்தாலும் அ.தி.மு.க. கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படாது. பிரதமர் மோடியை சந்தித்து பேசியதன் மூலம் நான் தமிழக பா.ஜ.க.வுக்கு தலைமை ஏற்கபோவதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவி வருகின்றன. 2021 சட்டமன்ற தேர்தலில் த.மா.கா. எம்.எல்.ஏ.க்களின் குரல் ஒலிக்கும். அதை நோக்கி எங்கள் பயணம் இருக்கும்.

    இவ்வாறுஅவர் கூறினார்.
    Next Story
    ×