search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிடிவி தினகரன்
    X
    டிடிவி தினகரன்

    2021ல் அதிமுக-திமுக இல்லாத புதிய ஆட்சி: டிடிவி தினகரன்

    2021-ல் அ.தி.மு.க., தி.மு.க. அல்லாத மக்கள் விரும்பும் புதிய ஆட்சி மலரும் என்று திருச்சியில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
    திருச்சி:

    திருச்சியில் இன்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.ம.மு.க. கட்சி பதிவு தாமதத்தால் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. ஒரு தேர்தலில் தோல்வியடைந்ததை வைத்து அக்கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்க இயலாது. உள்ளாட்சி தேர்தலில் அ.ம.மு.க. உறுதியாக போட்டியிடும். கட்சி பதிவு கிடைத்தால் கட்சி சின்னத்திலும், இல்லையென்றால் சுயேட்சையாகவும் போட்டியிடுவோம்.

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    ஆளும் கட்சியானது உள்ளாட்சி தேர்தலை நடத்த தயாராக இல்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியே உள்ளாட்சி தேர்தலை நடத்த சிலர் முட்டுக்கட்டை போடுவதாக கூறுகிறார். உண்மையிலேயே தேர்தலை நடத்த விரும்பியிருந்தால் எப்போதோ நடத்தியிருக்கலாம்.

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின் போது ஒரு பக்கம் அ.தி.மு.க.வினர் செயல் வீரர்கள் கூட்டம் நடத்தினர். மற்றொரு பக்கம் தலைமை செயலாளரை வைத்து தேர்தலை நிறுத்தி வைத்தனர். உள்ளாட்சி தேர்தலை நடத்த ஆளுங்கட்சியினருக்கு ஈடுபாடு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது அவரிடம் நிருபர்கள், ரஜினி-கமல் அரசியலில் இணைந்து செயல்படப்போவதாக கூறியுள்ளார்களே? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த தினகரன், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமென்றாலும் அரசியல் கட்சி தொடங்கலாம். நாங்கள் யாரையும் சவாலாக கருதவில்லை. எங்களை பொருத்த அளவில் எதிரிகளையும், துரோகிகளையும் அடுத்த முறை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதே முழுமூச்சாக இருக்கும்.

    நண்பர் ரஜினிகாந்த் அடுத்த தேர்தலில் மாற்றம் வரும் என்று சொல்லியிருக்கிறார். உறுதியாக 2021-ல் புதிய ஆட்சி மலரும். அ.தி.மு.க., தி.மு.க. அல்லாத மக்கள் விரும்பும் புதிய ஆட்சி மலரும். 2016, 17-ல் எடப்பாடி பழனிசாமி எங்கிருந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். யாரால் முதல்வரானார் என்பது மக்களுக்கும் தெரியும். ராஜீவ்காந்தி கொலையாளிகள் விடுதலையில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது. பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது ஒரு விபத்து. அந்த கட்சிக்கு மக்கள் அங்கீகாரம் அளிக்கவில்லை என்றார்.

    2021-ல் அமையும் ஆட்சி அ.தி.மு.க.-தி.மு.க. இல்லாத ஆட்சியா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு தினகரன் பதிலளிக்கையில், நிச்சயம் அ.தி.மு.க.-தி.மு.க. இல்லாத ஆட்சிதான் என்று பதில் அளித்தார். ரஜினியின் கருத்துக்கு தினகரன் ஆதரவு தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×