search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    ஆலங்குளம், சங்கரன்கோவிலில் அரசு கலைக்கல்லூரிகள் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், ஆலங்குளத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
    சென்னை:

    தென்காசி புதிய மாவட்ட தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட புதிய அறிவிப்புகள் வருமாறு:-

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இரு பாலர் பயிலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, 8 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

    தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் 9 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மகளிர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும்.

    இம்மாவட்ட வேளாண்மை பணிகள் மேலும் சிறப்பாக நடைபெறும் வண்ணம், மழை நீரை முறையாக சேமித்து, பாசன பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, தென்காசி மாவட்டத்தில் சித்தாறு உபவடி நிலத்தில் 22.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை, ஆலங்குளம், கீழப்பாவூர் மற்றும் மேலநீலிதநல்லூர் ஆகிய ஒன்றியங்களில், சுமார் 6,000 ஹெக்டேர் பாசன நிலங்கள் பயனடையும் வண்ணம், நீர்ப்பாசன கட்டமைப்புகள் புனரமைப்பு 395 பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டம் விரைவில் முழுமையான பயன்பாட்டிற்கு வரவிருக்கின்றன.

    தென்காசி மாவட்டத்தை துவக்கி வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

    கடையநல்லூர் வட்டம், சிந்தாமணி கிராமத்தில் கோட்டமலையாற்றின் குறுக்கே 1 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கப்படும்.

    கடையநல்லூர் வட்டம், சிந்தாமணி கிராமம், கோட்டமலையாற்றின் குறுக்கே 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் படுகை அணை அமைத்து வண்ணநேரி, சகலநேரி, மலையடிகுறிச்சி ஆகிய குளங்களுக்கு தண்ணீர் வழங்கும் திட்டம் மேற்கொள்ளப்படும்.

    கடையநல்லூர் வட்டம், சிந்தாமணி கிராமம் கோட்ட மலையாற்றின் குறுக்கே 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் படுகையணை அமைத்து, தாருகாபுரம், சிறுகுளம் மற்றும் அதனைச் சார்ந்த குளங்களுக்கு தண்ணீர் வழங்கும் திட்டம் மேற்கொள்ளப்படும்.

    வீரகேரளம்புதூர் வட்டம், வீராணம் பெரிய குளத்திலிருந்து செல்லும் காசிக்குவாய்தான் வழங்கு கால்வாயிலிருந்து காவலாக்குறிச்சி பெரிய குளத்திற்கு புதிய கால்வாய் அமைப்பதற்கான ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

    சிவகிரி வட்டம், ராயகிரி கிராமம் உள்ளாற்றின் குறுக்கே 1 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அணைக்கட்டு அமைத்து மேலகரிசல் குளத்திற்கு தண்ணீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

    சிவகிரி வட்டம், தென்மலை கிராமம் உள்ளாற்றின் குறுக்கே 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அணைக்கட்டு அமைத்து கன்னசேம்பல் குளத்திற்கு தண்ணீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

    இது தவிர, இம்மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவைகளை மேலும் சிறப்பாக நிறைவேற்றும் வகையில், சங்கரன்கோவில், புளியங்குடி மற்றும் திருவேங்கடம் பேரூராட்சிகளுக்கான 18.39 எம்.எல்.டி. கூட்டுக் குடிநீர்த் திட்டம் 147 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும்,

    ஆலங்குளம் மற்றும் சங்கரன்கோவில் ஒன்றியங்களைச் சேர்ந்த 147 ஊரகக்குடியிருப்புகளுக்கான 12.43 எம்.எல்.டி. கூட்டுக் குடிநீர்த் திட்டம் 31.32 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும்,

    கீழப்பாவூர் பேரூராட்சி, பாப்பாக்குடி, கடையம் மற்றும் கீழப்பாவூர் ஒன்றியங்களைச் சேர்ந்த 163 ஊரகக் குடியிருப்புகளுக்கான 9.27 எம்.எல்.டி. கூட்டுக் குடிநீர்த் திட்டம் 47 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

    இத்திட்டங்கள் விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு வரும்.

    இந்த ஆட்சியிலே ஒன்றும் நடைபெறவில்லை, இந்த ஆட்சியிலே மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு இடைத்தேர்தல் மூலமாக இந்த ஆட்சி சிறப்பான ஆட்சி, நாட்டு மக்களுக்கு நல்லது செய்கின்ற ஆட்சி என்று சான்று வழங்கப்பட்டுள்ளது.


    Next Story
    ×