search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

    எத்தனை முட்டுக்கட்டை போட்டாலும் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
    • தென்காசியை புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டதன் மூலம் 33 ஆண்டுகால கனவு தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.
    • எத்தனை முட்டுக் கட்டைகள் போட்டாலும் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். 
    • மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது.
    • ஸ்டாலின் மேயராக வர வேண்டும் என்பதற்காக 2006-ம் ஆண்டு தி.மு.க.வினர் நேரடி தேர்தலை கொண்டு வந்தனர்.
    தென்காசி:

    நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசியை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இது தமிழ்நாட்டின் 33-வது மாவட்டமாகும்.

    தென்காசி மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ நிர்வாகப் பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கின. இந்த மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில் உள்பட 8 தாலுகாக்கள் உள்ளன. இவற்றின் நிர்வாகப் பணிகளும் இன்று தொடங்கின.

    இதற்கான தொடக்க விழா இன்று தென்காசியில் நடந்தது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழாவில் கலந்து கொண்டு தென்காசி புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தென்காசி மக்களின் நீண்ட கால கோரிக்கை இன்று நிறைவேற்றப்பட்டதில் மட்டற்ற மகிழ்ச்சி. தலைவர்களின் கனவு நனவாகி விட்டது. என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்று எம்.ஜி.ஆர். பாடினார். அதற்கேற்ப அனைத்து வளங்களும் உள்ள ஒரே மாவட்டம் தென்காசி மாவட்டம். குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய 3 வித நிலங்களும் இங்கு உள்ளது.

    மாவட்டத்தை பிரித்துள்ளதால் மக்களின் திட்டங்களை எளிதாக நிறைவேற்றலாம். அடித்தட்டு மக்களுக்கு தேவையானவை விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க முடியும்.

    இந்த அரசு உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த இருக்கிறது. மாநில தேர்தல் ஆணையம் இதற்காக முனைப்போடு செயல்பட்டு வருகிறது. 2018-ம் ஆண்டு வார்டு மறுவரையறை செய்யப்பட்டதின் அடிப்படையில் இந்த தேர்தல் நடைபெறும்.

    சிலர் உள்ளாட்சி தேர்தல் நடத்தக்கூடாது என்று முட்டுக்கட்டை போடுகிறார்கள். எத்தனை முட்டுக் கட்டைகள் போட்டாலும் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது.

    தற்போது தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஒரு தவறான செய்தியை பரப்பி வருகிறார். உள்ளாட்சி தேர்தலை தள்ளி போட சூழ்ச்சி நடக்கிறது என்று கூறுகிறார். 1996 வரை கவுன்சிலர்கள் தான் தலைவர்களை தேர்ந்தெடுத்து வந்தனர்.

    ஸ்டாலின் மேயராக வர வேண்டும் என்பதற்காக 2006-ம் ஆண்டு தி.மு.க.வினர் நேரடி தேர்தலை கொண்டு வந்தனர். மீண்டும் அதை மாற்றியது தி.மு.க.தான்.

    மு.க.ஸ்டாலின்


    அப்போது சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலின் பேசும் போது, மேயர் ஒரு கட்சியாகவும், கவுன்சிலர்கள் வேறு கட்சியாகவும் இருந்தால் மக்கள் திட்டங்களை நிறைவேற்ற முடியாது என்று கூறினார். எனவே மறைமுக தேர்தல் நடத்தப்படுவதாக சட்டமன்றத்தில் கூறினார்.

    இப்போது அதையே அ.தி.மு.க. கொண்டு வந்துள்ளது. பல மாநிலங்களில் மறைமுக தேர்தல்தான் நடைபெறுகிறது. எனவே எத்தனை முட்டுக்கட்டை போட்டாலும் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும்.

    எம்.ஜி.ஆர். 1986-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்கினார். அதைத்தொடர்ந்து ஜெயலலிதா பல்வேறு புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்தார்கள். அந்த வழியில் இன்று தென்காசி மாவட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த மாவட்டத்தில் இயற்கை வளங்கள் அதிகம். புகழ் மிக்க வழிபாட்டு தலங்களும் உள்ளன. தமிழை வளர்த்த ஜமீன்களும், முதல் சுதந்திர போராட்ட வீரர்கள் பூலித்தேவனும், ஒண்டி வீரனும் இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

    33 ஆண்டுகால கனவு தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் 2916.13 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது. இதன் மக்கள் தொகை 14 லட்சத்து 7 ஆயிரத்து 627 ஆகும். தென்காசி, சங்கரன் கோவில் ஆகிய 2 கோட்டங்களும், 8 தாலுகாக்கள், 30 பிர்காக்கள், 251 கிராமங்களை உள்ளடக்கியது தென்காசி மாவட்டம்.

    தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய நகராட்சிகளும், 18 பேரூராட்சிகளும், 5 சட்டமன்ற தொகுதிகளும் உள்ளன. இந்த மாவட்ட மக்களுக்கு தேவையான ஜம்மு நதி கால்வாய் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். செண்பகவல்லி அணைகட்டு திட்டம் நிறைவேற கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும்.

    இந்த அரசு உயர்கல்வியில் சாதனை படைத்துள்ளது. 12 கல்லூரிகள், 5 பாலிடெக்னிக்குகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே உயர்கல்வி படித்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

    இங்கு 49 சதவீதம் பேர் உயர்கல்வி படித்து வருகின்றனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டு ரூ.3 லட்சத்து 437 கோடி மதிப்பில் தொழில் தொடங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

    மொத்தம் 344 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதன் மூலம் 10 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். ஆனால் இது குறித்து பொய்யான பிரசாரத்தை பரப்பி வருகிறார்கள்.

    நிலத்தடி நீரை அதிகரிக்க குடிமராத்து திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பருவமழை காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பி உள்ளது.

    இந்த திட்டத்திற்காக 2017-ம் ஆண்டு ரூ.100 கோடியும், 2018-ம் ஆண்டு ரூ.328 கோடியும், 2019-ம் ஆண்டு ரூ.500 கோடியும் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு விடுபட்ட அனைத்து குளங்களும் தூர்வாரப்படும்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
    Next Story
    ×