search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஜினிகாந்த்
    X
    ரஜினிகாந்த்

    ரஜினியின் கட்சி அறிவிப்பு எப்போது?- ரசிகர்கள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

    கட்சியை தொடங்காமலேயே பரபரப்பான பேச்சு மற்றும் பேட்டிகளால் அதிரடி காட்டும் ரஜினி, தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் தனது வேகத்தை அதிகப்படுத்துவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
    • 2021-ம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் மிகப்பெரிய அற்புதத்தை அதிசயத்தை நூற்றுக்கு நூறு நிகழ்த்துவார்கள்- ரஜினிகாந்த்
    • ரஜினிகாந்த் தனது பேச்சு மற்றும் பேட்டிகளால் அரசியல் களத்தில் பேசப்படும் நபராக மாறியுள்ளார்.
    • தர்பார் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி அடுத்து என்ன பேசப்போகிறார்? என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

    சென்னை:

    தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழும் நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டார்.

    உடனடியாக புதுக்கட்சியை தொடங்காவிட்டாலும் அவ்வப்போது தனது அதிரடி பேச்சுக்களால் ரஜினிகாந்த் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார்.

    கடந்த ஆண்டு கல்லூரி விழா ஒன்றில் பேசிய ரஜினி தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாக கூறினார். அந்த இடத்தை நான் கண்டிப்பாக நிரப்புவேன் என்றும், எம்.ஜி.ஆர். தந்த நல்லாட்சியை என்னாலும் தரமுடியும் என்றும் ரஜினி பேசிய பேச்சுக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

    இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் கருத்து தெரிவித்த ரஜினி, தமிழ்நாட்டில் சரியான ஆளுமை இல்லாத தலைமைக்கு வெற்றிடம் இருப்பதாகவே மீண்டும் தெரிவித்தார்.

    இதற்கு அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுமே எதிர்ப்பு தெரிவித்தன. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறும்போது, எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது என்று தெரிவித்தார். வயதான காலத்தில் ரஜினி அரசியலுக்கு வந்துள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.

    இதற்கு பதில் அளிக்கும் வகையில் கடந்த 17-ந்தேதி ரஜினி கருத்து தெரிவித்தார். நேரு ஸ்டேடியத்தில் கமலுடன் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பற்றி காரசாரமான கருத்துக்களை கூறினார். எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆனது அதிசயம் என்றும் அது போன்ற அதிசயம் நாளையும் நடக்கும் என்றும் ரஜினி பேசிய பேச்சுக்கள் அ.தி.மு.க.வினர் மத்தியில் கடும் எதிர்ப்பை சம்பாதித்தன.

    இந்த பரபரப்புக்கு மத்தியில் தேவைப்பட்டால் இணைந்து செயல்படுவோம் என்று ரஜினியும், கமலும் அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டனர்.

    தமிழக மக்களின் நலனுக்காக இணைந்து செயல்படும் சூழ்நிலை ஏற்பட்டால் அதற்கு தயாராகவே இருப்பதாக இருவரும் தெரிவித்து இருந்தனர்.

    இதனையும் அ.தி.மு.க. கடுமையாக விமர்சித்து இருந்தது. அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா நாளேட்டில் நேற்று வெளியிடப்பட்டிருந்த கட்டுரையில் ரஜினியும் கமலும் இணைந்து செயல்படுவது, “எலியும் பூனையும் குடித்தனம் நடத்துவது போன்றதற்கு சமமாகும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதன்மூலம் ரஜினியின் வெற்றிட பேச்சு... கமலுடன் கைகோர்க்கப்போவதாக அறிவிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் ரஜினி-அ.தி.மு.க. மோதல் போலவே உருவாகி இருந்தது.

    இந்த நிலையில் ரஜினிகாந்த் “அதிசயம் நிகழும்” என்பது தொடர்பாக பரபரப்பான கருத்துக்களை தெரிவித்தார்.

    “2021-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் மிகப்பெரிய அற்புதத்தை அதிசயத்தை நூற்றுக்கு நூறு நிகழ்த்துவார்கள்” என்று ரஜினி மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார். இது தமிழக அரசியலில் அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 1½ ஆண்டுகளே இருக்கும் நிலையில் ரஜினி இப்போதே தேர்தலை எதிர்க்கொள்ள ஆயத்தமாகி விட்டதாகவே அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.

    கட்சியை தொடங்காமலேயே பரபரப்பான பேச்சு மற்றும் பேட்டிகளால் அதிரடி காட்டும் ரஜினி, தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் தனது வேகத்தை அதிகப்படுத்துவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    1996-ம் ஆண்டு பாட்ஷா படம் வெளியானபோதே ரஜினி அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அவர் அதில் ஆர்வம் காட்டவில்லை. ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரது மறைவுக்கு பிறகே ரஜினி அரசியல் பிரவேசம் செய்துள்ளார்.

    இவர்கள் இருவரையும் மனதில் வைத்துதான் வெற்றிடம் இருப்பதாகவும் சரியான ஆளுமை இல்லை என்றும் ரஜினி கருத்து தெரிவித்துள்ளார்.

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி திடீரென முதல்-அமைச்சர் ஆனதை குறிப்பிடும் வகையிலேயே அவர் முதல்வர் ஆனது அதிசயம் என்று தெரிவித்த ரஜினி, வருகிற தேர்தலில் அதுபோன்ற அதிசயம் நிகழும் என்று திரும்ப திரும்ப கூறி வருகிறார்.

    2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் புதிய கட்சியை தொடங்கி மாற்றத்தை ஏற்படுத்தும் எண்ணத்தில்தான் ரஜினி இதுபோன்று பேசி வருகிறார். எனவே அடுத்த ஆண்டு இறுதியில் ரஜினி புதிய கட்சியை தொடங்குவார் என்றே எதிர் பார்க்கப்படுகிறது.

    ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. அந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அடுத்த மாதம் 7-ந்தேதி நடைபெறுகிறது. பிரம்மாண்டமான முறையில் சென்னையில் நடைபெறும் இந்த விழாவில் ரஜினி ரசிகர்கள் திரளாக பங்கேற்கிறார்கள். இந்த விழாவிலும் ரஜினி அரசியல் தொடர்பாக அதிரடி பேச்சை வெளிப்படுத்துவார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    தனது அரசியல் பயணம் தொடர்பாக அந்த விழாவில் ரஜினி அடுத்து என்ன பேசப்போகிறார்? என்று ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.

    கடந்த சில நாட்களாகவே ரஜினிகாந்த் தனது பேச்சு மற்றும் பேட்டிகளால் அரசியல் களத்தில் பேசப்படும் நபராக மாறியுள்ளார்.

    ரஜினியின் இந்த வேகம் அ.தி.மு.க-தி.மு.க. கட்சியினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வருகிற சட்டமன்ற தேர்தலுக்கான பரபரப்பு இப்போதே தொடங்கி உள்ளது.
    Next Story
    ×