search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    அரசு பள்ளியில் மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியை இடமாற்றம்

    பெரம்பலூர் அருகே அரசு பள்ளியில் மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியை இடமாற்றம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே புதுநடுவலூர் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளனூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 2 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் பெர்னாட் குளோரி என்ற ஆசிரியை மாணவ, மாணவிகளை கண்மூடித்தனமாக தாக்கி கல்வி கற்று கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதையறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் பெர்னாட் குளோரியை பலமுறை கண்டித்தும் அவர் அதனை கண்டு கொள்ளவில்லை. கல்வித்துறையினரிடம் புகார் அளித்தும் ஆசிரியை மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் ஆசிரியை பெர்னாட் குளோரி தாக்கியதில் மாணவர்கள் பலருக்கு வீக்கம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் நேற்று மாலை பள்ளிக்கு சென்று ஆசிரியை பெர்னாட் குளோரியை கண்டித்ததோடு, பள்ளியை விட்டு வெளியேற்றினர். பின்னர் பள்ளிக்குள் வரக்கூடாது எனக்கூறி பள்ளி கேட்டை மூடியதோடு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த வட்டார கல்வி அலுவலர்கள் ராமதாஸ், செந்தாமரைசெல்வி ஆகியோர் பள்ளிக்கு சென்று பெற்றோர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காரணமின்றி மாணவர்களை தாக்கிய ஆசிரியை பெர்னாட் குளோரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியை பள்ளிக்குள் நுழையக்கூடாது என வலியுறுத்தினர்.

    இதையடுத்து கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், மாணவர்களை ஆசிரியை தாக்கியது உண்மை என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, ஆசிரியை பெர்னாட் குளோரி மீது துறை வாரியாக நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, வேறு பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்ய மாவட்ட உயர் கல்வி அலுவலர்களுக்கு பரிந்துரை செய்யப்படும் எனவும் கூறினர்.

    இனிமேல் இந்த பள்ளிக்குள் ஆசிரியை வரமாட்டார் என உறுதி அளித்ததன் பேரில் பெற்றோர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு வெளியேறினர்.

    இதனிடையே ஆசிரியை பெர்னாட் குளோரியை வேறு பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்தும், வேறு ஆசிரியர் ஒருவரை அந்த பள்ளிக்கு பணியமர்த்தியும் மாவட்ட கல்வி அலுவலர் மாரி மீனாள் உத்தரவிட்டார்.
    Next Story
    ×