search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீதிமன்றம் (கோப்புப்படம்)
    X
    நீதிமன்றம் (கோப்புப்படம்)

    ரூ.10½ லட்சம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு 2 ஆண்டு ஜெயில்

    சென்னையில் ரூ.10½ லட்சம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னையைச் சேர்ந்தவர் செல்வம். ஜவுளி ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இவர், கடந்த 2009-ம் ஆண்டு துபாயைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் நடத்தி வந்த நிறுவனத்துக்கு ரூ.1.59 கோடிக்கு ஜவுளி ஏற்றுமதி செய்தார். அந்த நிறுவனம் ஒரு பகுதி தொகையை மட்டும் கொடுத்து விட்டு மீதி பணத்தை வழங்காததால் செல்வம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

    இந்த புகார் மீது வழக்குப் பதிவு செய்ய அப்போதைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ரூ.50 ஆயிரம் லஞ்சமாக பெற்றுள்ளார். இதன் பின்பு, ராமமூர்த்தியின் மனைவி கல்பனாவை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே வேளச்சேரியில் உள்ள கல்பனாவுக்கு சொந்தமான சொத்தை, புகார் தாரரான செல்வத்துக்கு கிரைய ஒப்பந்தம் செய்து கொடுத்து பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர இருவரும் முடிவு செய்தனர்.

    இதை அறிந்த இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் லஞ்சமாக ரூ.30 லட்சம் கொடுக்கும்படி செல்வத்திடம் கேட்டுள்ளார். வேறு வழியில்லாமல் செல்வம் ரூ.10 லட்சம் லஞ்சமாக கொடுத்துள்ளார். மொத்தம் ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் வாங்கிய பிறகும் மீதி பணத்தை கொடுக்காததால் கிரைய ஒப்பந்தம் செய்து கொடுக்கவிடாமல் கல்பனாவை இன்ஸ்பெக்டர் தடுத்துள்ளார்.

    இதனால் செல்வம், அனைத்து ஆவணங்களுடன் சென்னை போலீஸ் கமி‌ஷனரிடம் புகார் செய்தார். கமி‌ஷனர் உத்தரவின் பேரில் கூடுதல் கமி‌ஷனர் விசாரணை நடத்தினார். விசாரணையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் லஞ்சம் வாங்கியது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து செந்தில்குமார் மீது வழக்குப் பதிவு செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி, லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்ஸ்பெக்டர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட்டில் நீதிபதி ஓம்பிரகாஷ் முன்னிலையில் நடந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி, இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
    Next Story
    ×