search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாராயணசாமி
    X
    நாராயணசாமி

    மத்திய- மாநில நெருக்கடிகளை சமாளித்து நலத்திட்டங்களை செயல்படுத்துகிறோம்- நாராயணசாமி பேச்சு

    மத்திய அரசு நிதி தர மறுக்கிறது, மற்றொரு புறம் அதிகாரத்தில் உள்ளவர்கள் அரசுக்கு நெருக்கடி தருகின்றனர். 2 நெருக்கடிகளையும் சமாளித்து நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என்று நாராயணசாமி பேசியுள்ளார்.

    புதுச்சேரி:

    இந்தியாவின் நிதி கூட்டாட்சி தத்துவத்தில் வளர்ந்து வரும் சவால்கள் என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு புதுவை ஓட்டல் செண்ப காவில் நடந்தது. கேரளா நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் தலைமை வகித்தார். திருவனந்தபுரம் குலாதி நிறுவன இயக்குனர் ஜோசப் வரவேற்றார்.

    கருத்தரங்கை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார். அவர் பேசியதாவது:-

    புதுவையை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. மாநலத்தின் வருவாயில் 42 சதவீதம் போக மற்றவற்றை மத்திய அரசு வரியாக பெற்றுக் கொள்கிறது. ஆனால், மானியத்தை படிப்படியாக குறைத்துவிட்டது.

    தற்போது மாநில திட்டங் களுக்காக 60 முதல் 70 சதவீத நிதியை புதுவையிலேயே திரட்டுகிறோம். கடந்த காலத்தில் மத்திய அரசு 70 சதவீத மானியம் கொடுத்து வந்தது. 30 சதவீதத்தை மாநில வருவாயில் பெற்று வந்தோம்.

    ஆனால், தற்போது மத்திய அரசு மானியம் 26 சதவீமாக குறைக்கப்பட்டு விட்டது. பிற மாநிலங்கள் 42 சதவீத மானியத்தை பெறுகிறது. அதைக்கூட யூனியன் பிரதேசமான புதுவைக்கு மத்திய அரசு வழங்கவில்லை.

    புதுவையில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை என பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இதற்கு நிதி தருவதில்லை. 7-வது சம்பள கமி‌ஷனை மத்திய அரசு அமல்படுத்தியது. புதுவையில் இதனை அமல்படுத்த ரூ.650 கோடி செலவிட்டோம்.

    ஆனால், இதற்கான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. புதுவையில் இயற்கை வளங்கள் இல்லை. சுற்றுலா, கலால் என குறுகிய வருவாய் வாய்ப்புகளே உள்ளது.

    டெல்லி யூனியனில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளுக்கு ஓய்வூதியத்தை மத்திய அரசு வழங்குகிறது. ஆனால், புதுவைக்கு வழங்கவில்லை. இருப்பினும் புதுவையின் வளர்ச்சி 11.4 சதவீதமாக உள்ளது.

    மாநில அரசால் தேர்வு செய்யப்படும் மருத்துவ மாணவர்களுக்கு ரூ.2.25 லட்சம், என்ஜினீயரிங் மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம், உதவித்தொகை, விவசாயிகளுக்கு கடன் என பல திட்டங்களை செயல் படுத்தி வருகிறோம். இந்த மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு போதிய நிதி தருவதில்லை.

    மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றால் புதுவையை மாநிலமாக கருதுகின்றனர். நிதி ஆதாரம் கேட்டால் யூனியன் பிரதேசம் என கூறுகின்றனர்.

    மத்திய அரசு பல்வேறு வரிகள் மூலம் மாநில அரசின் வருவாயை எடுத்துக் கொள்கிறது. இதற்காகத்தான் நாங்கள் மாநில அந்தஸ்து வேண்டும் என கேட்கிறோம். பட்ஜெட்டிற்கு ரூ.1500 கோடி மட்டுமே தருகின்றனர். ரூ.3 ஆயிரத்து 500 கோடி தரும்படி வலியுறுத்தி வருகிறோம்.

    இத்தகைய சூழலில் கூட்டாட்சி தத்துவம் எங்கே உள்ளது? பல்வேறு சிக்கல்கள் இருந்தும் புதுவையின் நிதி பிரச்சினையை சமாளித்து வருகிறோம். ஒருபுறம் மத்திய அரசு நிதி தர மறுக்கிறது, மற்றொரு புறம் அதிகாரத்தில் உள்ளவர்கள் அரசுக்கு நெருக்கடி தருகின்றனர். 2 நெருக்கடிகளையும் சமாளித்து நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

    சமீபத்தில் உருவான ஜம்மு, காஷ்மீரைக்கூட 15வது நிதிக்குழுவில் சேர்த்து உள்ளனர். புதுவையையும் நிதிக்குழுவில் சேருங்கள் என்றால் மத்திய அரசு எந்த பதிலும் தரவில்லை.

    புதுவைக்கு பல்வேறு பிரச்சினைகள் உள்ளது. இதற்கெல்லாம் உரிய தீர்வு காண வேண்டும். சுற்றுலா, தொழில் வளம் புதுவையில் உள்ளது. ஆனால், இதற்கு மத்திய அரசின் ஆதரவு இல்லாமல் உள்ளது.

    இதனால்தான் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். இதற்காக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினோம். அனைத்துக்கட்சிகளின் கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றினோம். டெல்லிக்கே சென்று போராடினோம்.

    ஆனால், எங்களுக்கு மாநில அந்தஸ்து வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதுவையில் இலவசமாக அரிசி வழங்கி வந்தோம்.

    ஆனால், அரிசி வழங்கக் கூடாது பண மாக வழங்குங்கள் என நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அமைச்சரவையில் முடி வெடுத்து அரிசி வழங்க வேண்டும் என முடிவெடுத்து கோப்புகளை கவர்னருக்கு அனுப்பினோம்.

    புதுவையில் பல்வேறு கிராம மக்களிடம் கலந்து பேசினோம். மக்கள் அரிசிதான் வேண்டும், பணம் வேண்டாம். பணமாக வழங்கினால் குடும்ப தலைவர்கள் வங்கி கணக்கிற்கு செல்கிறது. அந்த தொகையை வேறு வழியில் செலவிடுகின்றனர் என மக்கள் புகார் தெரிவித்தனர். கவர்னரிடமும் கிராம மக்கள் இதைப்பற்றி புகார் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைத்தோம். ஆனாலும் இலவச அரிசி வழங்க அனுமதி கிடைக்கவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது என சுப்ரீம்கோர்ட்டு கூறியுள்ளது.

    அமைச்சரவை முடிவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என விதி உள்ளது. ஆனாலும் தொடர்ந்து பணம் வழங்க நெருக்கடி கொடுக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார். கருத்தரங்கில் ஜம்மு, காஷ்மீர் முன்னாள் நிதி அமைச்சர் ஹசீப்திரபு, எம்.பி. கனிமொழி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    புதுவை சமூகவியல் நிறுவன தலைவர் செல்வம்வேளாங்கனி மாணிக்கம் நன்றி கூறினார்.

    இதைத்தொடர்ந்து பல்வேறு தலைப்பில் கருத்தரங்கு நடந்து வருகிறது.

    Next Story
    ×