search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணம் கொள்ளை
    X
    பணம் கொள்ளை

    குமரி மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் வீடு உள்பட 3 இடங்களில் கொள்ளை

    குமரி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீடு உள்பட 3 இடங்களில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    நித்திரவிளையை அடுத்த பெருமாவிளை பகுதியைச் சேர்ந்தவர் பாபு (வயது 65). இவர் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர். தற்போது நாகர்கோவிலில் வசித்து வருகிறார். பெருமாவிளையில் உள்ள வீட்டை பார்த்து வருவதற்காக நேற்று பாபு சென்றார்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்களும் சிதறிக் கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த ரொக்கப்பணம் ரூ.1850 மற்றும் உண்டியல் பணம் ரூ.1300 ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. வீட்டுக்கு பின்பகுதியில் இருந்த 7 வெண்கல பாத்திரங்களும் திருடு போய் இருந்தது.

    இதுபற்றி பாபு நித்திரவிளை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஜயதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்ட இடங்களில் இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

    மற்றொரு சம்பவம்...

    கன்னியாகுமரி பகுதியைச் சேர்ந்தவர் லில்லி ஜெயரீட்டா (வயது 61). இவர் நேற்று அந்த பகுதியில் உள்ள ஒரு ஆலயத்துக்கு காலையில் சென்று இருந்தார். பின்னர் அவர் மதியம் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு மேஜையில் இருந்த 2 செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசில் புகார் செய்தார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காந்தி கொள்ளை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜாக்கமங்கலம் பிள்ளையார்விளை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 44). சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு நாகர்கோவிலில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார். பின்னர் நேற்று மாலை அவர் வீடு திரும்பியபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த வெங்கடேஷ், வீட்டில் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த வெள்ளி குத்துவிளக்கு மற்றும் ரொக்கப்பணம் ரூ.5 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    இதுபற்றி வெங்கடேஷ் புகார் செய்தார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×