search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெங்கு கொசு
    X
    டெங்கு கொசு

    டெங்கு, மர்ம காய்ச்சலால் 1000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

    டெங்கு, மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள 1000-க்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    சென்னை:

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் சென்னையிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருந்தது.

    சென்னையில் காய்ச்சல், டெங்கு பாதிப்பு ஏற்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    மழை விட்டுவிட்டு பெய்து வருவதால் குழந்தைகள் அதிகளவு வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளை தேடி செல்கின்றனர்.

    தனியார் மருத்துவமனைகளிலும், சிறிய கிளினிக்குகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஒரு விதமான வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 4, 5 நாட்கள் கடும் கை, கால், உடல் வலியால் அவதிப்படுகிறார்கள்.

    காய்ச்சல் பாதிக்கப்பட்ட ஒரு சிலருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளிலும் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரையில் டெங்குவால் 4,500 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் அதிகமாகும். பாதிப்பு அதிகரித்த போதிலும் உயிரிழப்பு குறைந்துள்ளது.

    சுகாதாரத்துறையின் தீவிர தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கையால் டெங்கு பாதிப்பு சற்று குறைந்து இருப்பதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி தெரிவித்தார்.

    டெங்கு பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்தாலும் இந்த காலக்கட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதித்து புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்வோர்கள் அதிகளவு உள்ளனர்.

    ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலால் 5 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 60 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர். புற நோயாளிகளாக 200 பேர் சிகிச்சை பெற்று சென்றனர்.

    இதே போல ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் டெங்கு பாதிப்பும் கடந்த மாதத்தை விட குறைந்து இருப்பதாகவும் டீன் ஜெயந்தி தெரிவித்தார்.

    113 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் 20 பேர் டெங்கு பாதிப்புடன் அதற்கான சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

    எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் 150 குழந்தைகள் காய்ச்சல் பாதிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 48 குழந்தைகளுக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    கடந்த மாதம் 240 குழந்தைகள் வரை காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டனர். தற்போது காய்ச்சல் பாதிப்பு குறைந்து வருவதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இது தவிர கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி, தண்டையார்பேட்டை தொற்று நோய் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தனியார் குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையில் டெங்குவிற்கு பல குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிளேட்நட்ஸ் குறைந்து காணப்பட்ட அவர்களுக்கு தீவிர சிகிச்சை மூலம் அதிகரித்து வருகின்றன.

    Next Story
    ×