search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூரில் செந்தில்பாலாஜி எம்எல்ஏ தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அருகில் ஜோதிமணி எம்.பி., பலர் உள்ளனர்
    X
    கரூரில் செந்தில்பாலாஜி எம்எல்ஏ தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அருகில் ஜோதிமணி எம்.பி., பலர் உள்ளனர்

    கரூரில் புதிய பஸ்நிலையம் அமைக்க கோரி தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம்

    கரூரில் புதிய பஸ்நிலையம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க. சார்பில் இன்று காலை தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.
    கரூர்:

    கரூரில் புதிய பஸ்நிலையம் அமைக்க கருப்பம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் கிராமத்தில் அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது. பின்னர் இதனை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.

    இதில் நீதிமன்றம் பஸ் நிலைய பணிகளை உடனே தொடங்க வேண்டும் என உத்தரவிட்டு பல மாதங்கள் ஆகியும் பணிகளை தொடங்காமல் இருக்கும் அ.தி.மு.க. அரசை கண்டித்தும், திருமாநிலையூர் பகுதியில் உடனே பஸ் நிலையம் அமைக்க வலியுறுத்தியும் இன்று (வியாழக்கிழமை) காலை கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.

    போராட்டத்துக்கு தி.மு.க. மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். ஜோதிமணி எம்.பி., முன்னிலை வகித்தார். இதில் உயர் நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி, மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், விவசாய அணி தலைவர் ம.சின்னசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். உண்ணாவிரத போராட்டத்தையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    இதில் கலந்து கொண்ட ஜோதிமணி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    1996-ல் இருந்தே நெரிசலாக இருக்கும் கரூர் பஸ் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. பின்னர் செந்தில்பாலாஜி அமைச்சராக இருந்தபோது திருமாநிலையூர் பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைக்க அறிவிப்பு வெளியானது. ஆனால் அறிவிக்கப்பட்டு 6 ஆண்டுகள் ஆகியும் இன்னும் வரவில்லை.

    மக்கள் பிரச்சனையில் அரசியல் செய்யக்கூடாது, லாப நோக்கம் பார்க்கக்கூடாது என்ற அறம் அரசியல்வாதிகளிடம் இருக்க வேண்டும். ஆனால் இங்குள்ள போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், இந்த பஸ் நிலையத்தை கரூர் மக்களுக்கு கிடைக்க கூடாது என்ற எண்ணத்துடன் செயல்படுகிறார். நீதிமன்றம் பஸ் நிலைய பணிகளை உடனே தொடங்க வேண்டும் என்று எச்சரித்த பின்னரும், ஆளுங்கட்சியினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த புதிய பஸ் நிலையத்திற்காக இலவசமாக நிலம் வழங்கிய தொழிலதிபர் ஒருவர் மிரட்டப்பட்டு இருக்கிறார். நிலம் கொடுத்தவர்களை மிரட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வைத்துள்ளார்கள். இந்த உண்ணாவிரத போராட்டத்தை ஒடுக்குவதற்காக தி.மு.க.வின் கொடிகள் அகற்றப்பட்டுள்ளன. இது போன்ற அராஜகத்தை நான் எப்போதும் பார்த்ததில்லை. இருப்பினும் தி.மு.க. சார்பில் மக்களுக்காக இந்த அறப்போராட்டம் நடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×