search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டம்
    X
    போராட்டம்

    விலையில்லா மடிக்கணினி கேட்டு பள்ளி மாணவர்கள் திடீர் போராட்டம்

    திருவெறும்பூர் அருகே விலையில்லா மடிக்கணினி கேட்டு பள்ளி மாணவர்கள் திடீரென போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    திருவெறும்பூர்:

    திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் ஆதிதிராவிடர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில்  11-ம்வகுப்பு பயிலும் மாணவர்கள் 128 பேர் உள்ளனர். இதில் 52 பேருக்கு  கடந்த 3 மாதத்திற்கு முன்பு  தமிழக அரசு சார்பில்  விலையில்லா மடிக்கணின் வழங்கப்பட்டது. மீதம் உள்ள 76 மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. இது குறித்து மாணவர்கள் தரப்பில் பள்ளி நிர்வாகத்திடம் கேட்டதற்கு சரியான பதில் இல்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் மாணவர்கள் பள்ளி நுழைவாயில்  முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு திருச்சி மாவட்ட கல்வி அலுவலர் பாரத விவேகானந்தர் சென்று மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.  உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி சம்பவ இடத்திற்கு வந்து போராட்டம் நடத்திய மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த முற்பட்டபோது மோகன் குறுக்கிட்டு பேசினார். இதனால் அவருக்கும், முதன்மை கல்வி அலுவலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு திருவெறும்பூர் போலீசார் மற்றும் தாசில்தார் ஞானாமிர்தம் ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.  அப்போது முதன்மை கல்வி அதிகாரி சாந்தி, விடுபட்ட மாணவர்களுக்கு விரைவில் லேப்டாப்  வழங்குவதற்கு ஏற்பாடு செய்வதாக கூறினார். லேப்டாப் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்ததாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் தெரிவித்தார்.

    இந்த நிலையில் மோகன் மற்றும் இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டும் வகையில்  செயல்பட்டதாக கூறி, அவர்களை திரு வெறும்பூர் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் தலைமை யிலான போலீசார் கைது செய்து  வாகனத்தில் ஏற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போலீசார் வாகனத்தை மறித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் இந்திய மாணவர் சங்க நிர்வாகிகளை விடுவித்தனர்.

    இதனிடையே மோகன் கூறுகையில், நாளை திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×