search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்யமூர்த்தி பவனில் இந்திராகாந்தி படத்துக்கு காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி மரியாதை செலுத்தினார்.
    X
    சத்யமூர்த்தி பவனில் இந்திராகாந்தி படத்துக்கு காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி மரியாதை செலுத்தினார்.

    உள்ளாட்சி தேர்தலில் அதிமுக ஆள் தூக்கும் வேலையில் ஈடுபட திட்டம்- கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு

    தமிழக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. படை பலத்தை வைத்து ஆள் தூக்கும் தேர்தல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வருகிறது என்று கேஎஸ் அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.

    சென்னை:

    முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 102-வது பிறந்தநாளையொட்டி சத்யமூர்த்தி பவனில் இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தலைமையில் காங் கிரசார் அவரது படத்துக்கு மரியாதை செலுத்தினார்கள்.

    தொடர்ந்து ரஞ்சன்குமார் ஏற்பாட்டில் மனவளர்ச்சி குன்றிய இல்லங்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் சைக்கிள்களை அழகிரி வழங்கினார். நிகழ்ச்சியில் அழகிரி பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. படை பலத்தை வைத்து ஆள் தூக்கும் தேர்தல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வருகிறது. மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சிக்கு மக்கள் நேரடியாக தலைவரை தேர்வு செய்யும் தேர்தலை நடத்த வேண்டும்.

    கவுன்சிலர்களே தலைவரை தேர்வு செய்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தமிழக தலைமை தகவல் ஆணையர் நியமனத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. எதிர்க்கட்சி தலைவரின் ஒப்புதல் இல்லாமல் நியமனம் செய்துள்ளார்கள். இது கண்டிக்கத்தக்கது.

    புதுவையில் கருணாநிதிக்கு சிலை அமைக்க நிலம் கொடுக்க மாட்டேன் என்று சொல்ல கவர்னருக்கு அதிகாரம் இல்லை. மத்திய பா.ஜனதா அரசின் தவறான கொள்கைகளால் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது.

    பொது நிறுவனங்களை விற்கப்போவதாக நிர்மலா சீத்தாராமன் அறிவித்துள்ளார். மக்கள் பணத்தில் உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்கு அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது.

    காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி கொள்கை அடிப்படையிலானது. நட்சத்திர ஓட்டலில் வைத்து சூட்கேசை மாற்றி உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல. வருகிற உள்ளாட்சி தேர்தல் மட்டு மல்ல, சட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி மீண்டும் வெற்றி பெறும்.

    காங்கிரஸ் தொண்டர்கள் வெறும் பார்வையாளர்களாக இல்லாமல் செயல்படுபவர்களாக மாற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அவரிடம் நடிகர் ரஜினி, எடப்பாடி பழனிசாமி பற்றி கூறியதை அ.தி.மு.க. கண்டித்திருப்பது பற்றி கேட்டதற்கு, ‘ரஜினி கருத்தை தெரிவித்துள்ளார். இதற்காக அவர் மீது அ.தி. மு.க. இவ்வளவு ஆத்திரப்பட தேவையில்லை’ என்றார்.

    திருமாவளவன் கூட்டணியில் இருந்து கொண்டே சென்னை மாநகராட்சியை தனி தொகுதியாக அறிவிக்க கோரி இருப்பது பற்றி கேட்டதற்கு, ‘இதில் எந்த தவறும் இல்லை. இது கூட்டணிக்கு எதிரானது இல்லை’ என்றார்.

    நிகழ்ச்சியில் செல்லக்குமார் எம்.பி., மாநில நிர்வாகிகள் நாசே.ராமச்சந்திரன், பீட்டர் அல்போன்ஸ், கோபண்ணா, தாமோதரன், சிரஞ்சீவி, செல்வம், தணிகாசலம், பொன்.கிருஷ்ணமூர்த்தி, ராயபுரம் மனோ, மகளிர் காங்கிரஸ் தேசிய செயலாளர் சவும்யா ரெட்டி, மகளிர் காங்கிரஸ் தலைவி ஜான்சி ராணி, மைதிலி, சுதா, இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசன் மவுலானா, மாவட்ட தலைவர்கள் சிவராஜசேகர், வீரபாண்டியன், சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லம்பாஷா மற்றும் தமிழ்செல்வன், நாஞ்சில் பிரசாத், வில்லிவாக்கம் சுரேஷ், இல.பாஸ்கர். திருவான்மியூர் மனோகரன், மயிலை தரணி, பாலமுருகன், அகரம் கோபி, சுமதி, அன்பரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×