search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மர்ம காய்ச்சல்
    X
    மர்ம காய்ச்சல்

    திசையன்விளை அருகே மர்ம காய்ச்சலுக்கு 25-க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு

    திசையன்விளை அருகே மர்ம காய்ச்சலுக்கு 25-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருப்பது அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை செல்வமருதூரை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மகள் மோனி‌ஷா. இவளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சல் ஏற்பட்டது. உடனே சந்திரசேகர், மோனி‌ஷாவை அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை.

    உடனே அவர் மோனிஷாவை திசையன்விளை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை மோனி‌ஷா பரிதாபமாக இறந்தாள்.

    இந்த நிலையில் திசையன்விளை அரசு ஆஸ்பத்திரியில் மோனி‌ஷாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என கூறி மோனி‌ஷாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று மாலை ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த திசையன்விளை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    மேலும் சந்திரசேகரின் மகன்கள் ஆண்ட்ரூஸ் (6), சந்தோ‌‌ஷ் (4), அதே பகுதியை சேர்ந்த சேர்மத்துரை மகன்கள் இளமாறன் (5), இளங்கோ (3) ஆகியோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, திசையன்விளையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் சாந்தகுமார் மகன் ஜெர்சன் ராஜ் (6), விஜயகுமாரின் 8 மாத குழந்தை வன்னிராஜா ஆகியோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அந்த பகுதியில் 6 சிறுவர்கள் உள்பட சுமார் 25-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருப்பது அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. எனவே அங்கு சுகாதாரத்துறையினர் முகாமிட்டு தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில் இன்று அந்த பகுதியை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×