search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சாலை மறியல்

    கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
    சூலூர்:

    மத்திய அரசின் பவர் கிரீட் நிறுவனம் தமிழகத்தில் கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் விளை நிலங்கள் வழியாக உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

    இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இந்த நிலையில் விவசாய நிலங்கள் வழியாக உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோவை அருகே உள்ள கருமத்தம்பட்டி நால் ரோடு, சுல்தான் பேட்டை ஆகிய பகுதிகளில் இன்று விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்து இருந்தனர்.

    இதனை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். கருமத்தம்பட்டி நால்ரோட்டில் கட்சி சார்பற்ற விவசாய சங்க பொருளாளர் டாக்டர் தங்கராஜ் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    இதில் மாநில தலைவர் சண்முகம், நாம் தமிழர் கட்சி சூலூர் தொகுதி செயலாளர் நடராஜன், கோவை மாவட்ட தலைவர் கணேசன், ஏர்முனை சுரேஷ், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் வி.எம்.சி. மனோகரன், எஸ்.டி.பி.ஐ.யின் வர்த்தக அணி மாநில இணை செயலாளர் அப்துல் கரீம், மாவட்ட துணைத்தலைவர் ரகுபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அவர்கள் விவசாய நிலங்கள் வழியாக உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க கூடாது. புதை வழி தடத்தில் மின் கம்பிகளை கொண்டு செல்ல வேண்டும். ஏற்கனவே விவசாய நிலங்கள் வழியாக மின் கோபுரம் அமைக்கப்பட்ட இடங்களில் உள்ள விவசாயிகளுக்கு வாடகை வழங்க வேண்டும் என கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

    மறியலில் ஈடுபட்டவர்களை கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். 15-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். சுல்தான் பேட்டையில் ரோட்டில் அமர்ந்து மறியல் செய்தனர். இதில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், முத்து மாணிக்கம், ஓரக்கல் பாளையம் ராஜேந்திரன் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 50 பேரை பொள்ளாச்சி டி.எஸ்.பி. சிவகுமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

    பல்லடத்திலும் உயரழுத்த மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், புதை வடம் மூலம் மின்சாரம் கொண்டு செல்ல வலியுறுத்தியும், ஏற்கனவே விளைநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கோபுரத்துக்கு வாடகை தரக்கோரியும் இன்று பஸ் நிலையத்தில் சாலை மறியல் நடந்தது. இதில் உழவர் உழைப்பாளர் கட்சி திருப்பூர் மாவட்ட இளைஞரணி தலைவர் வாவிபாளையம் சோமு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சத்தியமூர்த்தி, உயர் மின்கோபுர எதிர்ப்பு விவசாயிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வாவி பாளையம் பார்த்தசாரதி, பி.ஏ.பி. பாசன சபை தலைவர் கண்டியன் கோவில் கோபால், காங்கிரஸ் நகர தலைவர் ஈஸ்வரமூர்த்தி, ம.தி.மு.க. பொங்கலூர் ஒன்றிய செயலாளர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி. முருகவேல் தலைமையிலான போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் சாலை மறியலை கைவிட மறுத்து விட்டனர். இதனையடுத்து 8 பெண்கள் உள்பட 90 பேரை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×