search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக்காணி தாமிரபரணி ஆற்றில் மீட்கப்பட்டவர்கள்
    X
    முக்காணி தாமிரபரணி ஆற்றில் மீட்கப்பட்டவர்கள்

    ஆற்று வெள்ளத்தில் சிக்கி தவித்த 7 பேர் படகு மூலம் மீட்பு

    முக்காணி தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் சிக்கி தவித்த 7 பேரையும் போலீசார் படகு மூலம் பத்திரமாக முக்காணிக்கு மீட்டு வந்தனர்.
    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரை அடுத்த முக்காணியில் தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணைக்கு கிழக்கு பகுதியில் தாமிரபரணி ஆறு மூன்றாக பிரிந்து கடலில் கலக்கிறது. இந்த ஆறு பிரியும் இடத்தில் சிலர் தூண்டில் போட்டு மீன் பிடிப்பது வழக்கம்.

    தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்த கணேசன், முனியசாமி, முத்தையாபுரத்தை சேர்ந்த மாரி, ஜெகன், சிவா, ஜேசுபாலன் மற்றும் முள்ளக்காட்டை சேர்ந்த பு‌‌ஷ்பராஜன் ஆகிய 7 பேரும் அந்த இடத்தில் தூண்டில் போட்டு மீன் பிடித்து, முக்காணியில் உள்ள மீன் கடையில் இரவில் விற்பதை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர்.

    அவர்கள் நேற்று மதியம் வழக்கம் போல் இடுப்பளவு தண்ணீரில் முதல் ஆற்றை கடந்து 2-வது ஆற்றின் கரையில் அமர்ந்து தூண்டில் போட்டு மீன் பிடித்து கொண்டு இருந்தனர். மாலையில் அவர்கள் மீன்பிடித்து விட்டு திரும்ப தயாராக இருந்தனர்.

    இந்த நிலையில் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் தடுப்பணையை தாண்டி அதிக அளவில் வந்தது. அப்போது அந்த 7 பேரும் பிடித்த மீன்களுடன் திரும்ப செல்ல முயன்றனர்.

    ஆனால் கழுத்தளவு தண்ணீர் சென்றதால் 7 பேரும் ஆற்றின் கரையில் ஏறி தப்பினர். அங்கிருந்து வீட்டிற்கு செல்ல முடியாமல் தத்தளித்தனர்.

    அவர்கள் 7 பேரும் வழக்கமாக மீன்களை விற்கும் கடைக்காரருக்கு, தாங்கள் ஆற்று வெள்ளத்தால் திரும்பி வர முடியாமல் பரிதவித்து கொண்டு இருப்பதாக தகவல் கொடுத்தனர். உடனடியாக அந்த கடைக்காரர், அது பற்றி ஆத்தூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

    புன்னக்காயலில் இருந்து ஒரு படகை வரவழைத்து, அவர்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இரவு 9 மணியளவில் அந்த 7 பேரும் படகு மூலம் பத்திரமாக முக்காணிக்கு மீட்டு வரப்பட்டனர். 
    Next Story
    ×