search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஜினிகாந்த்
    X
    ரஜினிகாந்த்

    அதிரடி அரசியலுக்கு தயாராகும் ரஜினிகாந்த்- அடுத்த மாதம் புதிய அறிவிப்பு

    நடிகர் ரஜினிகாந்த் அதிரடி அரசியலுக்கு தயாராகி வருகிறார். டிசம்பர் 12-ந்தேதி அவரது பிறந்த நாள் அன்று முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழ் திரைஉலகில் சூப்பர் ஸ்டாராக திகழும் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டு 2 ஆண்டுகள் ஆகப்போகிறது.

    கடந்த 2017-ம் ஆண்டு கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்கள் முன்னிலையில் அடுத்த சட்டமன்ற தேர்தலில் நம்ம கட்சியும் களத்தில் இருக்கும் என்று ரஜினி அறிவித்தார். உடனடியாக புதிய கட்சியையும் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் ரஜினி தொடர்ச்சியாக சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார். இருப்பினும் அவ்வப்போது தனது பேச்சுகள் மற்றும் பேட்டிகளால் அரசியல் களத்தை அதிர வைத்து கொண்டே இருக்கிறார்.

    ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் வெற்றிடம் நிலவுகிறது. அதனை நான் கண்டிப்பாக நிறைவேற்றுவேன். எம்.ஜி.ஆர். தந்த நல்லாட்சியை நான் தருவேன் என்று கடந்த ஆண்டு கல்லூரி விழா ஒன்றில் ரஜினி பேசினார்.

    இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் அவர் வெற்றிட அரசியல் குறித்து கருத்து தெரிவித்தார். தமிழகத்தில் சரியான ஆளுமையான தலைமை இல்லை என்று கூறினார்.

    இதற்கு அ.தி.மு.க, தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரஜினியை கடுமையாக விமர்சித்தார். வீட்டில் இருந்து கொண்டு பேட்டி கொடுப்பவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். ஆக முடியாது. அரசியல் பற்றி ரஜினிக்கு என்ன தெரியும்? என்று கேள்வி எழுப்பினார்.

    தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கூறும்போது, அரசியல் வெற்றிடத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே நிரப்பி விட்டார் என்று தெரிவித்தார்.

    ஸ்டாலின்.

    இதற்கு முன்னரும் ரஜினி இதுபோன்று தெரிவித்துள்ள பல கருத்துக்கள் பரபரப்பாக பேசப்பட்டன. அந்த வகையில் வெற்றிட அரசியல் விவகாரமும் பேசப்படும் வி‌ஷயமாகவே மாறியது. ரஜினிக்கு பிறகு அரசியல் பேசத் தொடங்கிய கமல் புதுக்கட்சி தொடங்கி பாராளுமன்ற தேர்தலையும் சந்தித்து விட்டார்.

    இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் ஏக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி தீவிரமாக அதிரடி அரசியலில் எப்போது குதிப்பார் என்று எதிர்பார்க்க தொடங்கியுள்ளனர்.

    அடுத்த மாதம் டிசம்பர் 12-ந்தேதி ரஜினியின் பிறந்தநாள் வருகிறது. அன்று அரசியல் பிரவேசம் தொடர்பாக ரசிகர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் வகையில் புதிய அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்று தெரிகிறது. இதற்காக ரஜினி ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

    இதற்கிடையே அடுத்த மாதம் தொடக்கத்தில் ‘தர்பார்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க தமிழகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்களுக்கு அழைப்பு அனுப்பப்படுகிறது.

    அந்த நிகழ்ச்சியிலும் ரஜினி அரசியல் தொடர்பான அதிரடி அறிவிப்பை தெரிவிப்பார் என்று மக்கள் மன்றத்தின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    ரஜினியை அவரது வீட்டில் தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் பிரமுகர்கள் சந்தித்து வருகிறார்கள். பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் ரஜினியை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். அப்போது இருவரும் பல்வேறு வி‌ஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.

    தமிழக அரசியலில் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் மறைவுக்கு பிறகு பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன. அரசியல் கட்சிகளை சேர்ந்த பலர் தங்களது கட்சி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒதுங்கி இருந்து வருகிறார்கள்.

    ரஜினி புதுக்கட்சி அறிவிப்பை வெளியிட்டதும் அவர்கள் தங்களது கட்சியில் இருந்து விலகி ரஜினி கட்சியில் சேர தயாராகி வருகி றார்கள்.

    ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பலரும் ரஜினியின் முழுமையான அரசியல் பிரவேசத்துக்காக காத்து இருக்கிறார்கள். அவர்களும் ரஜினியுடன் இணைந்து செயல்பட உள்ளனர்.

    அடுத்த ஆண்டு இறுதியில் புதுக்கட்சி தொடர்பான அறிவிப்பை ரஜினி நிச்சயமாக வெளியிடுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    2021-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தும் வகையில் தயாராகி வருகிறார்.

    தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்காமல் தனித்தே அவர் தேர்தலை சந்திக்க உள்ளார். இதற்கான தொடக்கமாகவே அவரது சமீபத்திய பேட்டி அமைந்து இருந்தது.

    ரஜினிகாந்த் பா.ஜனதா ஆதரவாளர் என்கிற கருத்து நீண்ட நாட்களாகவே இருந்து வந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எனக்கு பா.ஜனதா மற்றும் காவி சாயம் பூச முயற்சி நடக்கிறது. நான் அதில் சிக்க மாட்டேன் என்று ரஜினி வெளிப்படையாக அறிவித்தார்.

    தமிழகத்தை பொறுத்த வரையில் பா.ஜனதா ஆதரவாளர் என்ற முத்திரையுடன் களம் இறங்கினால் வெற்றி பெற முடியாது என்று ரஜினி எண்ணுகிறார். இதன் காரணமாகவே தனித்துப் போட்டி என்கிற முடிவை எடுத்து தனிவழியில் பயணிக்க திட்டமிட்டுள்ளார்.

    வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் இப்போதே தயாராகி வருகின்றன. அ.தி.மு.க. தலைமையில் பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணியும், தி.மு.க. தலைமையில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய கூட்டணியும் உள்ளது.

    கமல், சீமான் ஆகியோர் தனித்து போட்டியிடுகிறார்கள். தினகரனும் தனியாக களம் இறங்கவே வாய்ப்பு உள்ளது. இவர்களுக்கு மத்தியில் ரஜினி தனிக்கட்சி தொடங்கி களம் இறங்கும் போது அரசியல் களத்தில் மாற்றம் ஏற்படுமா? என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×