search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ஜெயக்குமார்
    X
    அமைச்சர் ஜெயக்குமார்

    பெண்ணையாறு நதி நீர் பிரச்சினையில் சட்டப்போராட்டம் தொடரும்- ஜெயக்குமார் அறிக்கை

    சுப்ரீம்கோர்ட்டில் அசல் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதால் பெண்ணையாறு நதி நீர் பிரச்சினையில் சட்டப்போராட்டம் தொடரும் என்று அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

    சென்னை:

    அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியிலிருந்தபோது பல காலம் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் அம்மாவின் வழியில் நடைபெறும் அரசு நதிநீர் பங்கீட்டு உரிமைகளில் அக்கறை காட்டுவதில்லை என்று குறை கூறியுள்ளது விந்தையாக உள்ளது.

    நதிநீர் பிரச்சினைகளில் தி.மு.க.வின் துரோகங்களை நான் ஏற்கெனவே பலமுறை சுட்டிக் காட்டியுள்ளேன்.

    பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணைகள், நீரைத் திருப்புவதற்கான கட்டுமானங்கள் போன்றவற்றை 1892 ஆம் ஆண்டு மதராஸ்மைசூர் ஒப்பந்தத்தை மீறும் வகையிலும், அந்த ஒப்பந்த ‌ஷரத்துப்படி தமிழ்நாடு அரசின் ஒப்புதல் பெறாமலும் கட்டத் தொடங்கிய போது தமிழ்நாடு அரசு அதன் மறுப்புகளை மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் தொடர்ந்து தெரிவித்து, மத்திய அரசு இப்பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண வேண்டி கேட்டுக் கொள்ளப்பட்டது.

    கர்நாடக அரசிடமிருந்தும், மத்திய அரசிடமிருந்தும் சாதகமான பதில் வரப்பெறாத நிலையில், தமிழ்நாடு அரசு கர்நாடகாவின் இத்தகைய நடவடிக்கைகள் மதராஸ்மைசூர் ஒப்பந்தத்தை மீறும் செயலாகும் எனவும், மற்றும் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வா தாரத்தை பாதிக்கும் எனவும் இயற்கையாக ஓடுகின்ற நீரினை கர்நாடக அரசு எவ்வித கட்டுமானத்தின் மூலமாக தடுத்து நிறுத்தக் கூடாது என அறிவிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் 18.5.2018 அன்று ஓர் இடைக்கால மனுவுடன் கூடிய சிவில் வழக்கினை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்தது.

    கர்நாடக அரசு, மார் கண்டேய நதியில் அணை கட்டுவதற்காக கட்டுமானப் பணிகளை தொடர்ந்து மேற் கொண்டதால், அதனை தடுத்து நிறுத்தக் கோரி 3.7.2019 அன்று ஓர் இடைக்கால மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த இடைக்கால மனு விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு அரசின் சார்பில் அனுபவம் வாய்ந்த மூத்த வழக்கறிஞர் மூலம் திறமையான வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டது.

    எனினும், உச்சநீதிமன்றம் 14.11.2019 அன்று வழங்கிய தீர்ப்பில், தமிழ்நாட்டின் இடைக்கால மனுவை ஏற்றுக்கொள்ளவில்லை என உத்தரவிட்டுள்ளதுடன், இப் பிரச்சினைக்கு தீர்வு காண ஒரு நடுவர் மன்றத்தை அமைக்க மத்திய அரசை 4 வார காலத்திற்குள் அணுகுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

    உச்சநீதிமன்ற தீர்ப்பின் சாராம்சத்தை முழுமையாக படிக்காமலும், தமிழ்நாடு அரசு தொடர்ந்த அசல் வழக்கு இன்னும் நிலுவை யில் உள்ளதை அரசியல் காரணங்களுக்காக மறைத் தும் கூறுவதையே துரைமுருகன் வாடிக்கையாக கொண்டுள்ளதை மக்கள் நன்கறிவர். இந்த அசல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் தான் உள்ளது. இதன் அடுத்த கட்ட விசாரணை 10.1.2020 அன்று எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

    உச்சநீதிமன்றம் தென் பெண்ணையாறு பிரச்சினையில் 14.11.2019 அன்று வழங்கிய தீர்ப்பின் மீது சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது. அவர்களிடமிருந்து சட்டப்பூர்வமான ஆலோசனை பெறப்பட்டவுடன் பெண்ணையாற்று நீரினை சார்ந்துள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனை பாதுகாக்கவும் தமிழ் நாட்டின் உரிமைகளை நிலை நாட்டவும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்படும்.

    காவேரி நடுவர்மன்றம் 5.2.2007 அன்று இறுதி தீர்ப்பினை வழங்கியபோது அதனை மத்திய அரசிதழில் வெளியிடுவதற்கு 2011 மே மாதம் வரை சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சிப் பொறுப்பில் இருந்த தி.மு.க. ஆக்கப்பூர்வமான நட வடிக்கைகளை மேற்கொள்ளாததால் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்புகளும், இன்னல்களும் ஏராளம். அம்மா அவர்கள் 2011-ல் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் மேற்கொண்ட தொடர் சட்டப் போராட்டத்தினால் தான் காவேரி நடுவர்மன்ற இறுதி ஆணை மத்திய அரசிதழில் 19.2.2013-ல் வெளியிடப்பட்டு செயலாக்கத்திற்கு வந்தது.

    அதன் பிறகு உச்சநீதிமன் றத்தில் அ.தி.மு.க. அரசு மேற்கொண்ட உறுதியான தொடர் சட்டப்போராட்டத்தினால் தான், அதன் இறுதி தீர்ப்பை 16.2.2018 அன்று பிறப் பிக்கப்பிட்டு, மத்திய அரசு ஒரு செயலாக்கத் திட்டத்தை ஆறு வார காலத்திற்குள் அமைக்க வேண்டுமென தீர்ப்பளித்தது. இதன் பிறகு, மத்திய அரசு தாக்கல் செய்த செயலாக்க திட்டத்தினை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்வதாக 18.5.2018 அன்று தீர்ப்பு அளித்தது.

    இதன் அடிப்படையில் மத்திய அரசு காவேரி நீர்மேலாண்மை ஆணையம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகளை 1.6.2018 அன்று அரசிதழில் வெளியிட்டது. இவ்விரு அமைப்புகளின் செயல்பாடுகள் காவேரி நடு வர்மன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட பல்வேறு அம்சங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளன.

    காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் தி.மு.க. இழைத்த துரோகத்தை மறைக்கவே, துரைமுருகன் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி வருகிறார்.

    துரைமுருகன்

    இவ்வாறு காவேரி நதிநீர் பிரச்சனை ஆகட்டும், முல்லைப் பெரியாறு பிரச்சினை ஆகட்டும், தி.மு.க. ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும், விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கவும் எந்தவிதமான ஆக்கப்பூர்வமான நட வடிக்கைகளும் எடுக்கவில்லை என்பதும், தங்கள் சொந்த நலன்களுக்கும் பலன்களுக்கும் மட்டுமே பயன்படுத்திக் கொண்டனர் என்பது அனைவரும் அறிந்ததே.

    துரைமுருகன் பல ஆண்டுகள் தி.மு.க.ஆட்சியில் அமைச்சராக இருந்ததாலோ என்னவோ “பங்கீடு” குறித்து அவரது அனுபவத்தைக் கொண்டு தனது அறிக்கையில் அது பற்றி தெரிவித்துள்ளார். தனது “பங்கீடு” அனுபவத்தை வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் செயல்படுத்தியதால் தான், வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுத்ததால், தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதும் இந்த நாட்டிற்கே தெரியும்.

    நதிநீர்ப் பங்கீட்டு பிரச்சினைகளில் அம்மாவின் வழியில் உறுதியுடன் செயல்படும் இந்த அரசு தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பேணிக்காக்கவும் தொடர்ந்து செயல்படும். பெண்ணையாறு நதிநீர் பிரச்சனையிலும் தொடர்ந்து சட்டப் போராட்டம் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகள் நிலைநாட்டப்படும்.

    இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

    Next Story
    ×