
பிள்ளைகள் நன்றாக இருந்தால்தான் கடைசி காலத்தில் நம்மையும் நன்றாக கவனித்து கொள்வார்கள் என்றுதான் பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக கஷ்டப்படுகிறார்கள்.
ஆனால் பிள்ளைகள் நன்றி கெட்டவர்களாக மாறி விட்டால் என்ன செய்வது? அதனால்தான் பல தாய்-தந்தைகள் முதியோர் இல்லங்களிலும், சாப்பாட்டுக்கே வழியில்லாமல் பிச்சை எடுத்து வாழும் சூழ்நிலையும் உள்ளது.
இன்றும் நன்றி கெட்ட பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பதற்கு கிருஷ்ணகிரியில் நடந்துள்ள இந்த சம்பவம் ஒரு சாட்சி.
கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி சகுந்தலா. இந்த தம்பதியின் மகன் அருண்குமார்.
அருண்குமாருக்கு திடீரென்று சிறுநீரகம் பாதிப்பு அடைந்தது. கிட்னி மாற்றுவதை தவிர வழியில்லை என்று டாக்டர்கள் கூறி விட்டனர். எப்படியாவது மகனை பிழைக்க வைக்க வேண்டும் என்பதற்காக அருண்குமாரின் தாய் தனது கிட்னியை தானமாக கொடுத்தார். தாய் கொடுத்த கிட்னியில் அருண்குமார் உயிர் பிழைத்தார்.
அருண்குமாருக்கு திருமணம் செய்து வைத்த பெரியசாமி தனது மகன் எதிர்காலத்தில் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக கிருஷ்ணகிரியில் உள்ள 10 கடைகள் உள்ளிட்ட சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான நிலங்களையும் தானமாக எழுதிக் கொடுத்தார்.
ஆனால் செய்த நன்றி கூட இல்லாமல் பெற்றோரை கவனிக்காமல் அருண்குமார் தனது மனைவியுடன் சேர்ந்து பெற்றோர்களை வீட்டைவிட்டு விரட்டி கொடுமைப்படுத்தினார். முதுமை காரணமாக மனம் நொந்து மனநிலை சற்று பாதிப்பு அடைந்தனர்.
மகனின் அரவணைப்புக்காக தாயும், தந்தையும் ஏங்கினார்கள். ஆனால் அந்த கல்நெஞ்சுக்கார மகனால் அவர்களுக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. ஒரு முதியோர் இல்லத்தில் தஞ்சம் அடைந்தார்கள்.
பெற்ற ஒரே மகனால் பல்வேறு துன்பங்களுக்கு ஆளான பெற்றோர் முதியோர் பராமரிப்பு மற்றும் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் மகன் மீது நடவடிக்கை எடுக்கும்படி மனு கொடுத்து இருந்தனர். பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு அருண்குமாருக்கு தானமாக பெற்றோர் எழுதிக்கொடுத்த கடைகள் மற்றும் ரூபாய் மூன்று கோடி மதிப்பிலான சொத்துக்களை அருண்குமாரிடம் இருந்து அதிகாரிகள் திரும்ப பெற்றனர். பின்னர் பெரியசாமியையும் அவரது மனைவி சகுந்தலாவையும் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாச்சியர் தெய்வ நாயகி நேரில் அழைத்து அவர்களிடம் ஒப்படைத்தார்.
இதனால் முதியோர் பராமரிப்பு மற்றும் மறு வாழ்வு திட்டத்தின் கீழ் மனுதாக்கல் செய்ததின் அடிப்படையில் தானமாக கொடுத்த மூன்று கோடி மதிப்பிலான நிலத்தை மீண்டும் எங்களிடம் வருவாய் கோட்டாட்சியர் தேவநாயகி வழங்கினார் என்றனர்.