search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    உத்தமபாளையம் அருகே ஜாமீனில் வந்த வாலிபரை வெட்டிக் கொன்ற கும்பல்

    உத்தமபாளையம் அருகே ஜாமீனில் வந்த வாலிபரை வெட்டி படுகொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் கோகிலாபுரம் பொது சுடுகாடு அருகே முல்லைப் பெரியாறு செல்லும் பகுதியில் ஒரு வாலிபர் உடல் கிடப்பதாக உத்தமபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மேலே கொண்டு வந்தனர்.

    அப்போது அந்த வாலிபரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்து ஆற்றில் வீசிச் சென்றது தெரிய வந்தது. அவரது உடலில் பல இடங்களில் வெட்டு காயங்கள் இருந்தது. இதனையடுத்து அந்த வாலிபரின் உடலை உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் கம்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கந்தசாமி மகன் சிவகுருநாதன் (28) என தெரிய வந்தது.

    இவர் மீது பல்வேறு திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளன. இதற்காக சிறை சென்றுள்ள சிவகுருநாதன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்தார். அதன் பிறகு சென்னையில் உள்ள தனது அண்ணன் திருக்குமார் என்பவர் வீட்டில் தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளார்.

    அதன் பிறகு மீண்டும் கம்பத்துக்கு வந்த சிவகுருநாதன் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவது மற்றும் ஊர் சுற்றுவது போன்ற வேலைகளில் இருந்துள்ளார். இதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் சிவகுருநாதன் மீண்டும் மாயமானார்.

    அவரது தாய் ஜோதி தனது மகனை பல இடங்களில் தேடி வந்த நிலையில் முல்லைப் பெரியாற்றில் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து முன் விரோதம் காரணமாக அவரை கொலை செய்தார்களா? அல்லது திருட்டு சம்பவத்தில் பங்கு பிரிப்பதில் தகராறு ஏற்பட்டதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×