search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவி பாத்திமாவின் தந்தை செய்தியாளர் சந்திப்பு.
    X
    மாணவி பாத்திமாவின் தந்தை செய்தியாளர் சந்திப்பு.

    எனது மகள் மரணத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்- பாத்திமாவின் தந்தை பேட்டி

    நடந்த சம்பவங்களைப் பார்க்கும்போது என் மகள் மரணம் தற்கொலை போல் தெரியவில்லை என்றும், அவள் மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் மாணவி பாத்திமாவின் தந்தை கூறி உள்ளார்.
    சென்னை:

    சென்னை ஐ.ஐ.டி.யில் தங்கி படித்து வந்த கேரள மாணவி பாத்திமா, கடந்த 9-ந்தேதி விடுதி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது செல்போனில், தனது தற்கொலைக்கு காரணம் பேராசிரியர் பத்மநாபன் என குறிப்பிடப்பட்டிருந்தது. பேராசிரியர்கள் துன்புறுத்தல் காரணமாகவே பாத்திமா தற்கொலை செய்து கொண்டதாகவும் இதுபற்றி உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்றும் மாணவியின் பெற்றோர் வலியுறுத்துகின்றனர். மாணவி தற்கொலை தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இந்நிலையில் மாணவியின் தந்தை லத்தீப், சென்னையில் இன்று டிஜிபியை சந்தித்து மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  லத்தீப் கூறியதாவது:-

    என் மகளுக்கு ஐஐடியில் மிக கடுமையான நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் தான் காரணம் என என் மகள் தனது குறிப்பில் எழுதி உள்ளார். என் மகள் எந்த ஒரு காரியத்தையும் கடிதமாக எழுதி வைக்கக்கூடியவள். அதேபோல் தான் இதையும் செய்திருக்கிறாள். திறமையும், அறிவும் பெற்ற என் மகள் தற்கொலை முடிவு எடுத்திருக்கமாட்டார்.

    என் மகள் தனக்கு ஐஐடியில் துன்புறுத்தல் நடப்பதாக அடிக்கடி என்னிடம் கூறுவாள். நவம்பர் 8-ம் தேதி இரவு ஐஐடி கேண்டீனில் இருந்தபடி அழுதுகொண்டே பேசினாள். அவள் தற்கொலை செய்ததாக தகவல் கிடைத்து, நாங்கள் வந்து பார்த்தபோது, என் மகளின் அறையில் கயிறு இல்லை. அந்த அறைக்கு சீல் வைக்கவும் இல்லை. கல்லூரியின் சிசிடிவி பதிவுகளை தரும்படி கேட்டோம். ஆனால் தர மறுக்கிறார்கள். நடந்த சம்பங்களைப் பார்க்கும்போது இந்த மரணம் தற்கொலை போல் தெரியவில்லை. 

    மாணவி பாத்திமா

    என் மகள் போன்று இனி யாரும் மரணமடையக் கூடாது. எனது மகளின் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும்.

    முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என டிஜிபி உறுதி அளித்துள்ளார். தமிழக அரசையும் டிஜிபியையும் முழுமையாக நம்புகிறோம். என் மகளின் செல்போன் போலீஸ் வசம் உள்ளது. அதனை பெற்றோர் முன்னிலையில் அன்லாக் செய்யவேண்டும். பாத்திமாவின் மரணம் குறித்து ஐஐடி உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×