search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐஐடி முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்
    X
    ஐஐடி முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்

    ஐஐடி முன்பு போராட்டம் - தி.மு.க.வினர் 25 பேர் கைது

    சென்னை ஐஐடி மாணவி தற்கொலைக்கு காரணமான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 25 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி.யில் தங்கி படித்து வந்த கேரள மாணவி பாத்திமா. கடந்த 9-ந்தேதி விடுதி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இது தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தினர். மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    மதிப்பெண் குறைவாக எடுத்திருந்த காரணத்தாலேயே மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்டதாக கோட்டூர்புரம் போலீசார் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் மாணவி பாத்திமாவின் செல்போனில், தனது தற்கொலைக்கு காரணம் பேராசிரியர் பத்மநாபன் என குறிப்பிட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது.

    இதற்கிடையே மாணவியின் பெற்றோர், கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தும் முறையிட்டனர். அப்போது பேராசிரியர்கள் துன்புறுத்தல் காரணமாகவே பாத்திமா தற்கொலை செய்து கொண்டதாகவும் இதுபற்றி உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளியில் கொண்டு வரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக பினராயி விஜயன், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்தார். இதனை தொடர்ந்து மாணவி மரணம் தொடர்பாக உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

    சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஐ.ஐ.டி.க்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதன் பின்னர் பேட்டி அளித்த அவர் மாணவி மரணம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் அடங்கிய சிறப்பு விசாரணை குழு விசாரணை நடத்தும் என்று அறிவித்தார்.

    மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமி‌ஷனர் ஈஸ்வரமூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் குழு விசாரணையில் இறங்கியுள்ளது.

    கூடுதல் துணை கமி‌ஷனர் மெக்லினா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். உதவி கமி‌ஷனர் பிரபாகரன், இன்ஸ்பெக்டர் ஜெயபாரதி ஆகியோர் விசாரணை குழுவில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் ஐ.ஐ.டி.க்கு நேரில் சென்று இன்று விசாரணை நடத்தினர்.

    கோட்டூர்புரம் போலீசாரிடம் இருந்து வழக்கு தொடர்பான ஆவணங்களை கேட்டுப்பெற்றுள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார் 4 பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோட்டூர்புரம் போலீசார், புகாருக்குள்ளான பேராசிரியர் பத்மநாபன் உள்பட 5 பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர். மாணவி பாத்திமாவின் தோழிகள் 15 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த விசாரணை விவரங்களை கேட்டுப் பெற்றுள்ள சிறப்பு விசாரணை குழுவினர் தங்களது விசாரணையின்போது கூடுதல் விவரங்களை திரட்டி உள்ளனர்.

    இந்த நிலையில் இன்று ஐ.ஐ.டி. முன்பு தி.மு.க. மாணவர் அணி துணைச்செயலாளர் கவினேசன் தலைமையில் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவி தற்கொலைக்கு காரணமான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோ‌ஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 25 பேரை போலீசார் கைது செய்தனர். அகில இந்திய மாணவர் பெருமன்றம் சார்பிலும் போராட்டம் நடந்தது. இதில் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
    Next Story
    ×