search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-அமைச்சர் நாராயணசாமி
    X
    முதல்-அமைச்சர் நாராயணசாமி

    கிரண்பேடியின் தாத்தா-பாட்டியே வந்து தடுத்தாலும் இலவச அரிசியை வழங்குவோம்: நாராயணசாமி

    கிரண்பேடியின் தாத்தா-பாட்டியே வந்து தடுத்தாலும் இலவச அரிசியை வழங்குவோம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

    திருக்கனூர்:

    நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமான மத்திய பாரதிய ஜனதா அரசை கண்டித்து தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை திருக்கனூர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் எதிரே நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சீனுவாசமூர்த்தி தலைமை தாங்கினார். காங்கிரஸ் நிர்வாகிகள் முத்தழகன், டி.எஸ்.ஏ. கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி. அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, கமலக்கண்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    அதில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    புதுவையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் இலவச அரிசி வழங்க வேண்டும் என்று திட்டம் தீட்டி இலவச அரிசி வழங்கினோம்.

    6 மாதம் அரிசி வழங்கிய நிலையில் கவர்னர் கிரண்பேடி அரிசி வழங்க கூடாது என தடுத்தார். அரிசிக்கு பதிலாக பணம் வழங்க வேண்டும் என்றார்.

     

    கிரண்பேடி

    அதனையும் மீறி மக்கள் விருப்பத்துக்கு ஏற்ப அரிசி வழங்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைத்தோம். அதனையும் கிரண்பேடி ஏற்கவில்லை.

    கிரண்பேடி தடுத்தாலும் சரி அல்லது அவரது தாத்தா- பாட்டியே தடுத்தாலும் சரி புதுவை மக்களுக்கு கண்டிப்பாக இலவச அரிசி வழங்குவோம். இதற்காக நாளை (இன்று) டெல்லி செல்ல உள்ளேன். அங்கு உள்துறை மந்திரி மற்றும் பிற துறை மந்திரிகளை சந்தித்து இதுகுறித்து பேசி கோரிக்கை வைக்க உள்ளேன்.

    கிரண்பேடி செல்லும் இடமெல்லாம் அவரிடம் மக்கள் இலவச அரிசி கேட்கிறார்கள். இதனை அறிந்தும் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கிரண்பேடி செயல்படுகிறார். புதுவை மக்களை பற்றி மோடிக்கு கவலை இல்லை.

    வேலைவாய்ப்பை உருவாக்கிட, தொழிற்சாலைகளை கொண்டு வர, ஏழை- எளிய மக்களுக்கு திட்டங்களை கொண்டு வர பிரதமர் மோடி பணம் வழங்குவது இல்லை.

    சர்க்கரை ஆலையை திறக்க முயற்சித்தால் அதனை கிரண்பேடி தடுக்கிறார். இப்படி புதுவையை குட்டிச் சுவராக்க வேண்டிய வேலையில் கவர்னர் கிரண்பேடி ஈடுபடுகிறார். புதுவை மக்களுக்கு எதிராக மோடியும், கவர்னர் கிரண்பேடியும் செயல்பட்டு வருகிறார்கள். அதுபோல் அதிகாரிகளும் தொல்லை தருகிறார்கள்.

    இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் வீரராகவன், சுரேஷ், செல்வ குமார், பரமசிவம் உள்பட ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்தி லிங்கம் எம்.பி. மற்றும் அமைச்சர்கள் அங்குள்ள ரோட்டோர டீக்கடையில் தொண்டர்களுடன் அமர்ந்து டீ குடித்தனர்.

    Next Story
    ×