search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெங்காயம்
    X
    வெங்காயம்

    வெங்காயம் கிலோ 90 ரூபாயாக உயர்வு

    வெங்காயம் வரத்து குறைந்ததால் இந்த வாரத்திற்குள் கிலோ ரூ.100 வரை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
    சென்னை:

    தமிழகத்துக்கு கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து வெங்காயம் வருகிறது. மிகப்பெரிய கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 80 லாரிகளில் வெங்காயம் வருவது வழக்கம். ஆனால் இப்போது 60 லாரிகளில் மட்டுமே வெங்காயம் கொண்டு வரப்படுகிறது.

    இந்த ஆண்டு மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் பலத்த மழை பெய்துள்ளதால் வெங்காயம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்துக்கு வெங்காயம் வரத்து குறைந்துள்ளது.

    எதிர்பாராத இந்த காரணத்தால், வெங்காயம் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விற்பனையில் வெங்காயம் 1 கிலோ 50 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

    இதை வாங்கி விற்கும் காய்கறி மளிகை கடைக்காரர்கள் 1 கிலோ வெங்காயத்தை ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனை செய்து வருகின்றனர். சிவப்பு நிறத்தில் உள்ள ஆந்திரா வெங்காயம் 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    வெங்காயம் வரத்து குறைந்ததால் இந்த வாரத்திற்குள் கிலோ ரூ.100 வரை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதே போல் சாம்பார் வெங்காயம் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

    முருங்கைக்காய் விலையும் உச்சத்தை எட்டி உள்ளது. கோயம்பேட்டில் 1 கிலோ முருங்கைக்காய் ரூ.150 முதல் ரூ.160 வரை விற்கப்படுகிறது. காய்கறி கடைகளில் 1 முருங்கைக்காய் 20 ரூபாய்க்கு விற்கிறார்கள்.

    உள்ளூர் முருங்கைக்காய் வரத்து குறைந்ததால் கர்நாடகா, ஆந்திராவில் இருந்து முருங்கைக்காய் கொண்டு வரப்படுகிறது. இதனால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். அதே போல் காய்கறிகள் விலையும் சற்று அதிகமாக உயர்ந்துள்ளது.

    Next Story
    ×