search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உலக வங்கி அதிகாரிகளுடன்ஆலோசனை நடத்திய காட்சி.
    X
    துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உலக வங்கி அதிகாரிகளுடன்ஆலோசனை நடத்திய காட்சி.

    உலக வங்கி அதிகாரிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

    தமிழக திட்டங்களுக்கு நிதிதிரட்ட உலக வங்கி அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார்.

    சென்னை:

    அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிகாகோ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.

    இந்திய-அமெரிக்க தொழில் கூட்டமைப்பு கருத்தரங்கில் பங்கேற்று தமிழகத்துக்கு ரூ.710 கோடி முதலீடு திரட்டும் ஒப்பந்தத் தில் கையெழுத்திட்டார்.

    சிகாகோ பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று வாஷிங்டன் நகருக்கு சென்றார். அங்கு உலக வங்கி தலைமை அலுவலகத்துக்கு சென்று உயர் அதிகாரிகளை சந்தித்தார்.

    தமிழகத்தின் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர், வீட்டுவசதி மற்றும் போக்கு வரத்து மேம்பட்டு திட்டங்களுக்கு தேவையான நிதி உதவிகளை பெறுவதற்காக ஆலோசனை நடத்தினார். இதில் உலக வங்கி செயல் இயக்குனர் அபர்ணா, தமிழ் நாடு நிதித்துறை முதன்மைச் செயலாளர் கிருஷ்ணன், உலக வங்கி அதிகாரிகள் பங்கேற்றனர்.

    அதன்பிறகு சர்வதேச நிதி நிறுவன அலுவலகத்திற்கு சென்று தமிழகத்தில் பொது நிதி செலவினம் மற்றும் நிதி திறன் மேம்பாட்டு திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

    இதில் சர்வதேச நிதி நிறுவனத்தின் செயல் இயக்குனர் சுஜித்பாலா, மூத்த ஆலோசகர் நடராஜன், ஐடிசி இயக்குனர் ‌ஷர்மினி கூர்வே, ஆசியா-பசிபிக் துறை இயக்குனர் செங்யங்ரீ, தமிழக நிதித்துறை முதன்மைச் செயலாளர் கிருஷ்ணன், இந்திய மிஷின் தலைவர் ரணில் சல்கத்து ஆகியோர் பங்கேற்றனர்.

    பின்னர் வாஷிங்டனில் உள்ள கட்டுமான தொழில் நுட்பங்களை பார்வையிட்டார். தமிழகத்தில் கட்டுமான துறையில் புதிய தொழில் நுட்பங்ளை அறிமுகப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகள் அவருக்கு விளக்கம் அளித்தனர்.

    தமிழகத்தில் சி.எம்.டி.ஏ. மற்றும் வீட்டுவசதி துறை சார்பில் எண்ணற்ற திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளதால் அதை நவீனப் படுத்தி கட்டுமானங்களை உருவாக்க என்னென்ன புதிய நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்றும் அதிகாரிகள் விளக்கி கூறினார்கள்.

    அங்குள்ள அதிகாரிகளிடம் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசும்போது, ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான தொழில்கள் தமிழகத்தில் அதிகம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதை மேலும் முன்னேற்றம் அடைய செய்ய புதிய தொழில்நுட்பம் அவசியமாகிறது.

    அதற்கு இந்த விவாதம் பயனுள்ளதாக அமைந்துள்ளது என்றார்.

    முன்னதாக வாஷிங்டன் சென்றடைந்த துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு விமான நிலையத்தில் வட அமெரிக்க தமிழ் பேரவை தலைவர் சுந்தர் குப்புசாமி, உலக தமிழ் இளைஞர் பேரவை அட்லாண்டா தலைவர் பார்த்திபன், வாஷிங்டன் தமிழ் சங்க முன்னாள் தலைவர் ராஜாராம், ஸ்ரீனிவாசன், வாஷிங்டன் தமிழ் சங்க தலைவர் நித்தில செல்வன் முத்துசாமி மற்றும் தமிழ் அமைப்புகள் நிர்வாகிகள் திரளாக வந்து வரவேற்பு அளித்தனர்.

    Next Story
    ×