search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    திண்டுக்கல் அருகே பூட்டிய வீட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

    திண்டுக்கல் அருகே பூட்டிய வீட்டை உடைத்து நகை-பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே உள்ள வீரசின்னம்பட்டி மேற்கு தெருவைச் சேர்ந்தவர் பொன்ராம். (வயது 32). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பாண்டி செல்வி. டேட்டா எண்ட்ரி ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று பொன்ராம் வேலைக்கு சென்று விட்டார். இவரது மனைவி இரவு வேலைக்கு சென்றிருந்ததால் காலையில் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு அருகே உள்ள தனது தாய் வீட்டுக்கு தூங்கச் சென்று விட்டார். இவர்களது மகன் பள்ளிக்கு சென்று விட்டார்.

    மதிய வேளையில் பாண்டிச் செல்வி வீட்டுக்கு வந்த போது கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 12 பவுன் நகை ரூ.10 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    இது குறித்து சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். டி.எஸ்.பி. வினோத் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜாமுரளி சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    தடயவியல் நிபுணர் சீனியம்மாள் வீட்டில் பதிவாகியிருந்த முக்கிய தடயங்களை பதிவு செய்தார். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது.

    இவர்களது வீட்டின் அருகே பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராவில் 2 இளைஞர்கள் வீட்டின் கதவை உடைத்து பொருட்களை கொள்ளையடித்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அவர்கள் முகமூடி எதுவும் அணியவில்லை. அதில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    திண்டுக்கல் கோவிந்தராஜ் நகரில் செல்வராஜ் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து நேற்று 32 பவுன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இதேபோல் வீரசின்னம்பட்டியிலும் பூட்டி இருந்த வீட்டில் புகுந்து கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். தொடரும் இது போன்ற சம்பவங்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

    இந்த 2 சம்பவங்களில் ஈடுபட்டவர்களும் ஒரே நபர்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×