search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாண்டிபஜார்
    X
    பாண்டிபஜார்

    ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தால் ஜொலிக்கும் பாண்டி பஜார் - காண திரளும் பொதுமக்கள்

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் ஜொலிக்கும் பாண்டி பஜாரை காண பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு வருகிறார்கள்.
    சென்னை:

    சென்னை பெருநகரத்தின் இதயமாக திகழும் தியாகராயநகர் ‘பாண்டி பஜார்’ வணிக மையமாக திகழ்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருபவர்கள் ‘ஷாப்பிங்’ செல்வதற்கான தலமாக இது அமைந்துள்ளது.

    மக்கள் நெருக்கடி இட நெருக்கடி மற்றும் வாகன பெருக்கம் இவற்றின் காரணமாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக காணப்படும் பாண்டிபஜார் தற்போது முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உலகத் தரமான நடைபாதை வளாகம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் 11 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு அதில் முதல் நகரமாக தியாகராயநகர் தேர்வு செய்யப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பாண்டி பஜார் எழில்மிகு நடைபாதையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நேற்று திறந்து வைத்தார்.

    தியாகராயநகர் சாலை 1.5 கி.மீட்டர் நீளமுடையது. இந்த சாலையை ஒரு மணி நேரத்துக்கு 5 ஆயிரம் பாதசாரிகள் பயன்படுத்துகின்றனர். சாலையின் இருபுறமும் எல்.இ.டி.யுடன் கூடிய அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சிறுவர்கள் விளையாட வசதியாக விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    சுவர்களில் வண்ணமயமான ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளதால் இயற்கை போன்று காட்சியளிக்கின்றன.

    முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக பேட்டரி கார்கள் இயக்கப்படுகின்றன. நடைபாதையில் 126 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் அதில் அமர்ந்து இளைப்பாறவும் வசதி செய்யப்பட்டுள்ளன.வாகனங்கள் நிறுத்தும் வசதியும் உள்ளது.

    பொதுமக்கள் பயமின்றி நடந்து செல்லும் வகையில் அந்த சாலை முழுவதும் சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.

    மேலும் ‘ஆக்ட் பைபர் நெட்’ சார்பில் ‘வைபை’ வசதியும் அளிக்கப்படுகிறது. ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் இந்த சாலையை பயன்படுத்தும் போது இலவசமாக இணைய தள வசதியை பெற முடியும்.

    அவசர காலங்களில் போலீசார் விரைவாக செல்ல ‘பிரிகோ’ என்ற இருசக்கர வாகனம் தயாராக நிறுத்தப்பட்டுள்ளது. சைக்கிள் ஷேரிங் திட்டத்தின் கீழ் சைக்கிள் நிலையம் அங்கு உள்ளது. ஷாப்பிங் செல்ல விரும்புபவர்கள் ஸ்மார்ட் சைக்கிளை பயன்படுத்தும் வசதியும் அளிக்கப்பட்டுள்து.

    அகலமான சாலையால், பண்டிகை நாட்களில் கூட்ட நெரிசல் இன்றி பாண்டி பஜாரில் பொதுமக்கள் பொருட்கள் வாங்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    உலகத்தரத்தில் மேம்படுத்தப்பட்டுள்ள பாண்டி பஜாரில் இருபுறமும் சுமார் 10 மீட்டர் அளவுக்கு நடைபாதை நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது.

    தியாகராயநகர் பனகல் பூங்கா முதல் தணிகாசலம் சாலை வரை, தணிகாசலம் சாலை முதல் போக் சாலை வரை என மொத்தம் 1450 மீட்டருக்கு நவீன வசதியுடன் நடைபாதை உருவாக்கப்பட்டுள்ளது.

    இரவு நேரத்தில் இந்த சாலை மின்னொளியில் ஜொலிக்கும் வகையில் காட்சியளிக்கின்றன. அயல் நாடுகளில் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தையும் மன நிறைவையும் தருவதாக பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

    பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என அனை வரையும் நவீன நடைபாதை வளாகம் கவர்ந்துள்ளதாக பாராட்டி வருகின்றனர். பகலை விட மாலை, இரவு நேரங்களில் இந்த நடைபாதை வளாகம் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் அமைந்துள்ளதால் இதனை காண மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு வருகிறார்கள்.

    தியாகராயநகரில் நடை பாதை வளாகம் பயன்பாட்டிற்கு வந்துள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்வது தொடர்பாக சோதனை ஓட்டம் செய்ய இருப்பதால் இன்று முதல் இருவழி பாதைகள், ஒருவழிபாதையாக மாற்றப்பட்டுள்ளது.

    அண்ணா சாலையில் இருந்து பனகல் பார்க் நோக்கி செல்லும் வாகனங்கள் தணிகாசலம் சாலை சிக்னல் வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. தணிகாசலம் சாலை சிக்னலில் இடதுபுறம் திரும்பி, தணிகாசலம் சாலை, வெங்கட் நாராயணா சாலை சிக்னலில் வலதுபுறமா திரும்பி செல்ல வேண்டும்.

    பனகல் பார்க்கில் இருந்து அண்ணாசாலை மற்றும் எல்டாம்ஸ் சாலை சிக்னலுக்கு செல்லும் வாகனங்கள் பிரகாசம் சாலை, ஜி.என்.செட்டி சாலை சென்று, வாணி மகால் சிக்னலில் வலதுபுறம் திரும்பி டாக்டர் நாயர் சாலை வழியாக சென்று தி-நகர் சாலையில் இடதுபுறம் திரும்பி, ம.பொ.சி. சாலை சிக்னல் வழியாக செல்ல வேண்டும் என போலீசார் அறிவித்துள்ளனர்.

    ஆனால் ஒரு வழிப்பாதையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது தெரியாமல் பொதுமக்கள் தடுமாறினார்கள். வாகனங்கள் நிறுத்த இடம் இல்லாமல் புதிய நடை பாதையில் சிரமப்பட்டனர். ஒரு சில பகுதியில் வாகனம் நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

    அதில் ஒரு சில கார்கள் மட்டுமே நிறுத்த முடியும். அதில் வாகனங்கள் பார்க்கிங் செய்ய வசதி இல்லை என்று வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். வாகனங்களை பார்க்கிங் செய்வதில் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. சிலர் வாகனங்களை நிறுத்திவிட்டு ரொம்ப தூரம் நடந்து சென்றனர்.

    வயதானவர்கள் நடக்க முடியாமல் கஷ்டப்பட்டனர். புதிய நடைபாதை குறித்து பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வு மற்றும் தகவல்களை முறையாக தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×