
இந்த நிலையில் மாணவியின் தந்தை அப்துல் லத்தீப், தாயார் சஜிதா ஆகியோர் தங்களது மகள் பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி உள்ளனர்.
கொல்லத்தில் நிருபர்களிடம் பேட்டி அளித்த அவர்கள் கூறியதாவது:-
எங்களது மகள் மிகவும் தைரியமானவர். அவர், தற்கொலை செய்திருக்க மாட்டார். ஏற்கனவே கல்லூரியில் பல பிரச்சினைகள் இருப்பதாக அவர், அடிக்கடி எங்களிடம் போனில் பேசும்போது கூறுவார். மனரீதியாக பேராசிரியர் உள்பட பலரும் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி உள்ளார். மன ரீதியாக கொடுமைப்படுத்தி எங்கள் மகளை கொன்றுவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறுகிறார்கள். கடந்த சனிக்கிழமை எங்களது மகள் எங்களிடம் கடைசியாக பேசினார்.
அப்போது அவரது பேச்சில் அவர், தற்கொலை முடிவை எடுத்ததற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. ஆனால் மறுநாள் அவர் இறந்து விட்டதாக எங்களுக்கு தகவல் வந்தது. அந்த அதிர்ச்சியில் இருந்து எங்களால் மீள முடியவில்லை. எங்கள் மகள் சாவிற்கு காரணமான பேராசிரியர் பற்றி தனது செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளார். அவர் உள்பட இதில் தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை நடத்தி மகள் சாவிற்கு நீதி கிடைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.