search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கீழக்கரையில் சட்ட விரோத மது விற்பனை தொடரும் அபாயம் - போலீசார் கண்காணிக்க பொதுமக்கள் கோரிக்கை

    கீழக்கரையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில் சட்ட விரோதமாக மது விற்பனை தொடருவதால் போலீசார் கண்காணிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கீழக்கரை:

    கீழக்கரை புது பஸ்ஸ்டாண்ட் அருகே செயல்பட்டு வந்த இரண்டு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் பெண்கள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள் நிம்மதி பெருமூச்சுடன் அந்த வழியாக சென்று வருகின்றனர். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய கலெக்டர் வீரராகவ ராவ் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

    கீழக்கரை புதிய பஸ்ஸ்டாண்ட் பகுதியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தது. இதனால் குடிமகன்கள் தொல்லை அதிகரித்தது. குடித்துவிட்டு நடுரோட்டில் ரகளையில் ஈடுபடுவதும், போதை தலைக்கேறியதும் தாறுமாறாக பேசுவதும், ரோட்டில் விழுந்து கிடப்பதும் தொடர்ந்து வந்தது.

    இதனால் அந்த வழியாக பஸ்ஸ்டாண்ட், மார்க்கெட் செல்லும் பெண்கள் அச்சத்துடன் சென்று வந்தனர். பள்ளி குழந்தைகள் அந்த வழியாக செல்ல அச்சமடைந்தனர்.

    இந்த மதுபான கடைகளை மூடக்கோரி பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக நல அமைப்பினர், மகளிர் அமைப்பினர் தொடர்ந்து கோரிக்கை மனு அளித்தும் போராட்டம் நடத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது மக்களுக்க பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் கடை திறக்கப்படவில்லை. சரக்கு வாங்க வந்த குடிமகன்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கடைவாசலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

    இது குறித்து விசாரித்த போது இரண்டு டாஸ்மாக் கடைகளும் நிரந்தரமாக மூடப்பட்டு விட்டதாக தகவல் வெளியானது. இதனால் நீண்ட காலமாக போராடி வந்த அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

    தி.மு.க. நகர் மாணவரணி செயலாளர் ஹமீது சுல்த் தான் தலைமையில் மஹ்தூ மியா பள்ளி தாளாளர் இப்திகார் உசேன், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் அப்பா மெடிக்கல் சுந்தரம், மக்கள் டீம் காதர், தி.மு.க. வர்த்தக அணி நகர் தலைவர் நயினார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மது விற்பனை செய்யப்பட்ட கடை வாசலில் பொதுமக்களுக்கு மோர் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    டாஸ்மாக் கடை அடைக்கப்பட்டதால் தற்போது மதுபாட்டில்களை சிலர் மொத்தமாக வாங்கி வந்து அந்த பகுதியில் பதுக்கி வைத்து சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தள்ளது. பல லட்சம் ரூபாய் வருமானத்தையும் பொருட்படுத்தாமல் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று டாஸ்மாக் கடையை மூடிய தமிழக அரசின் நடவடிக்கைக்கு போலீசார் பக்கபலமாக இருந்து கீழக்கரையில் மது நடமாட்டத்தை அடியோடு ஒழித்து மது இல்லாத கீழக்கரையாக உருவாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×