search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

    கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
    கோவை:

    கோவை குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் மகேஷ்வரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளான, குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளுக்கான பாதாள சாக்கடை திட்டம் ரூ.591.14 கோடியிலும், குடிநீர் திட்டப்பணிகள் ரூ.202.30 கோடியிலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டங்கள் குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளின் 14 வார்டுகள் பயன்பெறுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

    பாதாள சாக்கடை திட்டத்தின் சிறப்பு அம்சமாக அனைத்து கழிவு நீரேற்று நிலையங்களிலும் முதன் முறையாக துர்நாற்றம் அகற்றும் கருவி பொருத்தப்பட உள்ளது.

    குடிநீர் திட்டப்பணிகளுக்காக, இப்பகுதிகளில் 18 புதிய குடிநீர் மேல்நிலை தொட்டிகளும், 2 குடிநீர் சமநிலை தொட்டிகளும், குடிநீர் பகிர்மான குழாய் பதிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றது.

    பாதாள சாக்கடைத்திட்டப்பணிகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முடிப்பதற்காகவும், செயலாக்கத்தின் போது பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை குறைப்பதற்காகவும், வீடுகள் அதிகமாக உள்ள சாலைகளிலும், போக்குவரத்து நெரிசல் உள்ள சாலைகளிலும், இரவு நேரங்களில் பணிகளை தொடங்கி காலையில் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

    பாதாள சாக்கடைத் திட்டப்பணிகளில் இதுவரை 88 கிலோ மீட்டர் நீள கழிவு நீர் சேகரிப்பு குழாய் பதிக்கப்பட்டு, 5800 ஆள்நுழை குழிகள் அமைத்தல் பணி நிறைவடைந்துள்ளது. இத்திட்டத்தின்கீழ் மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது.

    குடிநீர் பகிர்மான அபிவிருத்தி திட்டத்தின் கீழ், குனியமுத்தூர் அன்பு நகர் பகுதியில் கட்டப்பட்டு வரும் 2.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி பணி 80 சதவிகிதம் முடிவடைந்து விட்டது. அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு குடிநீர் தொட்டிகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது ஆலோசகர் சம்பத்குமார், மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) முரளி, நிர்வாக பொறியாளர்கள் முத்தையா, ரகுபதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×