search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிராபிக் ராமசாமி
    X
    டிராபிக் ராமசாமி

    கொடிக்கம்பம் விழுந்து இளம்பெண் படுகாயம் - ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி முறையீடு

    கோவையில் கொடிக்கம்பம் விழுந்து இளம்பெண் படுகாயம் அடைந்த சம்பவம் தொடர்பாக ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி முறையீடு செய்துள்ளார்.
    சென்னை:

    கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் நாகநாதன். இவரது மகள் ராஜேஸ்வரி. நட்சத்திர ஓட்டலில் கணக்காளராக வேலை செய்யும் இவர் நேற்று முன்தினம் காலையில் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார்.

    பீளமேடு கோல்டுவின்ஸ் பகுதியில் சாலைக்கு நடுவே அ.தி.மு.க. கொடிகம்பங்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு கம்பம் திடீரென சாலையில் சாய்ந்தது.

    அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த ராஜேஸ்வரி, தன் மீது கொடி கம்பம் விழாமல் தடுக்க மோட்டார் சைக்கிளை பிரேக் போட்டு நிறுத்தினார்.

    அப்போது பின்னால் வேகமாக வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் ராஜேஸ்வரியின் இரு கால்களும் நசுங்கின. அவரது மோட்டார் சைக்கிள் லாரி சக்கரத்தில் சிக்கிக் கொண்டது. படுகாயமடைந்த ராஜேஸ்வரிக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் எம்.சத்திய நாராயணன், என்.சே‌ஷசாயி ஆகியோர் முன்பு டிராபிக் ராமசாமி ஆஜராகி பள்ளிக்கரணையில் நடந்த சம்பவம் போல கோவையிலும் ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது. இளம்பெண் ராஜேஸ்வரியின் இரு கால்களிலும் கடுமையாக காயம் ஏற்பட்டுள்ளது.

    ஏற்கனவே, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் விதமாக பேனர்கள், விளம்பர பதாகைகள் உள்ளிட்டவைகளை வைக்கக்கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டும், சாலைக்கு நடுவே அ.தி.மு.க.வினர் கொடிக்கம்பம் வைத்து விபத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதுகுறித்து வழக்கு தொடர உள்ளேன். இந்த வழக்கை அவசரமாக உடனே விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், இதுகுறித்து மனுதாக்கல் செய்தால், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’ என்றனர்.

    ஏற்கனவே சென்னை பள்ளிக்கரணையில், அ.தி.மு.க.வினர் வைத்த பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் பரிதாபமாக பலியானார்.

    இந்த சம்பவத்துக்காக தமிழக அரசை சென்னை ஐகோர்ட்டு கடுமையாக கண்டித்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×