search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரிசி ராஜா
    X
    அரிசி ராஜா

    3 பேரை அடித்துக்கொன்ற அரிசி ராஜாவை பிடிக்க கபில்தேவ் வருகை

    பொள்ளாச்சி அடுத்து அர்த்தனாரிபாளையத்தில் 3 பேரை கொன்ற அரிசி ராஜாவை பிடிக்க கபில்தேவ் என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி அடுத்து அர்த்தனாரிபாளையத்தில் சாப்பாட்டு ராமன் என்னும் அரிசி யானையை கடந்த 4 மாதங்களில் மட்டும் 10-க்கும் மேற்பட்டோரை தாக்கியுள்ளது. இதில் 6 வயது சிறுமி உள்பட 3 பேலி பலியானர்.

    கடந்த 9-ந்தேதி இரவு இந்த யானை தாக்கியதில் ராதாகிருஷ்ணன் என்பவர் பலியானார். திருமாத்தாள் (55) என்பவர் படுகாயம் அடைந்தார்.குறிப்பிட்ட யானையை பிடிக்க பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தமிழக அரசு யானையை பிடிக்க உத்தரவிட்டது. கடந்த 10-ந்தேதி முதல் யானையை பிடிக்கும் பணி தொடங்கியது

    வனக்கால்நடை உதவி இயக்குநர் மனோகரன், வனக்கால்நடை மருத்துவர்கள் சுகுமார், கலைவாணன் ஆகியோரை கொண்ட மருத்துவக் குழுவினர், கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், பொள்ளாச்சி வனக்கோட்ட மாவட்ட வன அலுவலர் மாரிமுத்து, வனச்சரக அலுவலர்கள் காசிலிங்கம், சக்திவேல், நவீன்குமார் உள்ளிட்டோர் தலைமையிலான குழுவினர் யானையைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    10 மற்றும் 11-ந்தேதிகளில் அந்த பகுதிகளில் மழை பெய்ததால் யானை வனப்பகுதியை விட்டு வெளியே வரவில்லை. டாப் சிலிப்பில் இருந்து கும்கி யானைகள் கலீம், பாரி ஆகியவை வரவழைக்கப்பட்டு அர்த்தநாரிபாளையம் பெருமாள்மலை அடிவாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    இந்நிலையில், கும்கி யானை பாரிக்கு நேற்று இரவு மஸ்து ஏற்பட்டு மதம் பிடித்தது. யானை பாகனுக்கு அடிபணிய மறுத்தது. இதனால், கும்கி யானை பாரி லாரியில் ஏற்றப்பட்டு டாப்சிலிப் கொண்டு செல்லப்பட்டது.

    டாப் சிலிப்பில் இருந்து கும்கி யானை ராஜவர்த்தனை கொண்டுவரும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், ஒற்றை காட்டு யானை அர்த்தநாரிபாளையம் பகுதிக்கு 2 நாள்களாக வராமல் வேறு இடத்துக்கு இடம் பெயர்ந்தது. யானை வரும் என்று காத்திருந்த வனத்துறையினர் 3 குழுக்களாகப் பிரிந்து யானை இருக்கும் இடத்தைக் கண்டறியச் சென்றனர். நேற்று மாலை வரை தேடும் பணி நடைபெற்றது.

    அர்த்தநாரிபாளையத்தை அடுத்த கோபால்சாமி மலைக்கும் மேல், தாடகநாச்சி மலைப்பகுதியில் யானை இருப்பது நேற்று மாலை ட்ரோன் கேமரா உதவியுடன் கண்டறியப்பட்டது. இந்த யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    யானை வனப்பகுதியை விட்டு வெளியேறி சமவெளிப்பகுதிக்கு எப்போது வந்தாலும், அங்கு வைத்து மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முடிவை வனத்துறையினர் எடுத்துள்ளனர்.

    காட்டு யானை, தினசரி ஒரே பகுதிக்கு வராமல் அடிக்கடி வெவ்வேறு பகுதிகளுக்குச் செல்வதால் யானையைப் பின்தொடர்ந்து பிடிப்பது வனத்துறையினருக்கு சவாலாக அமைந்துள்ளது.

    கடந்த சில மாதங்களில் இந்த காட்டு யானை நவமலை, ஆழியாறு, சேத்துமடை, சர்க்கார்பதி, பருத்தியூர், கோபால்சாமி மலை, தாடகநாச்சி மலை, அர்த்தநாரிபாளையம் எனப் பல பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துகொண்டே இருந்துள்ளது.

    இது குறித்து ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் மாரிமுத்து கூறியதாவது:- மலைப்பகுதியில் உள்ள யானையை சமதளப்பகுதிக்கு விரட்டி வந்து டான்ஜெக்ட் என்ற நவீனரக துப்பாக்கியுடன் தயாராக உள்ள மருத்துவக்குழுவினர் மூலம் மயக்க ஊசி செலுத்த திட்டமிட்டுளோம். இதற்காக 3 குழுக்கள் அமைக்கப்பட்டு கீழ்நோக்கி மலையடிவாரத்துக்கு யானையை விரட்டி வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். யானை பிடிபட்ட உடன் உலாந்தி வனச்சரகத்தில் உள்ள யானை வளர்ப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு கூண்டில் அடைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிலையில் இன்று அதிகாலை யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டுவிட்டதாக தகவல்கள் பரவியது. இதனால் அந்த பகுதிக்கு பொதுமக்கள் படையெடுத்து வருகிறார்கள். இதனை வனத்துறையினர் உறுதியாக கூறவில்லை. இந்நிலையில் மதம் பிடித்த பாரிக்கு பதில் கும்கி ராஜவர்த்தன் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த சூழ்நிலைக்கு கும்கி கபில்தேவ் தான் சரியாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து பெருமாள் மலைப்பகுதிக்கு கபில்தேவ் கொண்டு வரப்பட்டது. கலீமும், கபில்தேவும் அரிசி யானையை பிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

    கும்கி கபில்தேவ்


    யானை அச்சத்தால் 3 குடும்பங்களை சேர்ந்த 10 தொழிலாளர்கள் குடும்பத்துடன் வீட்டை விட்டு வெளியேறி அங்குள்ள பெருமாள் கோவிலில் தஞ்சமடைந்துள்ளனர். காலையில் எழுந்து வழக்கம்போல் தோட்ட வேலைக்கு செல்கிறார்கள். யானையை விரைந்து பிடிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
    Next Story
    ×