search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவரை, போலீசார் தடுத்து அழைத்து வந்த காட்சி
    X
    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவரை, போலீசார் தடுத்து அழைத்து வந்த காட்சி

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

    அரசு பெண் ஊழியரிடம் கடனாக கொடுத்த பணத்தை திரும்ப பெற்று தர நடவடிக்கை எடுக்கக்கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்றார். இந்நிலையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து ஆண் ஒருவர் கையில் மண்எண்ணெய் பாட்டிலுடன் திடீரென்று நீதி வேண்டும், நீதி வேண்டும் என்ற கோஷத்தை எழுப்பியவாறு கலெக்டர் கார் நின்று கொண்டிருந்த இடத்தின் அருகே வேகமாக ஓடி வந்தார். பின்னர் அவர் உடனடியாக கையில் இருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடி சென்று, அவரை தடுத்து நிறுத்தி, அவரிடம் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை பிடுங்கினர். பின்னர் அவர் மீது போலீசார் தண்ணீர் ஊற்றி, அவரை குளிக்க செய்தனர்.

    இதையடுத்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் 3-வது வார்டுக்கு உட்பட்ட ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த ராஜேந்திரன்(வயது 39) என்பதும், எலக்ட்ரீசியான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பதும் தெரியவந்தது. தந்தை இறந்து விட்டதால், தாய் அம்மணி பிச்சையுடன் ராஜேந்திரன் வசித்து வருகிறாராம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திரன், அரசு பெண் ஊழியர் ஒருவருக்கு, மற்றவர்களிடம் இருந்து பணத்தை பெற்று, கடனாக ரூ.8 லட்சம் கொடுத்தாராம்.

    ஆனால் அந்த பணத்தை அந்த அரசு ஊழியர் ராஜேந்திரனுக்கு திருப்பி கொடுக்கவில்லை. ஆனால் ராஜேந்திரன் தனக்கு பணம் கொடுத்தவர்களுக்கு, நிலம் உள்ளிட்டவைகளை விற்று தொகையை திருப்பி கொடுத்து விட்டாராம். இதனால் தற்போது ராஜேந்திரன் வறுமையில் வாடுகிறாராம். இதனால் அரசு ஊழியரிடம் இருந்து பணத்தை திரும்ப பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜேந்திரன் பெரம்பலூர் போலீஸ் நிலையத்திலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும், கலெக்டர் அலுவலகத்திலும் ஏற்கனவே மனுக்கள் கொடுத்துள்ளாராம். ஆனாலும் இதுவரை அந்த அரசு பெண் ஊழியர் பணத்தை திருப்பி தரவில்லையாம். இதனால் மனமுடைந்த ராஜேந்திரன் தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றாக போலீசார் தெரிவித்தனர். மேலும் ராஜேந்திரனிடம் பெரம்பலூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கடந்த ஓரிரு மாதங்கள் தான் தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவங்கள் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று ராஜேந்திரன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், கலெக்டர் சாந்தாவிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், பெரம்பலூர் நகரின் நீர் ஆதாரமாக இருந்த ஜார்ஜ் வாய்க்கால் கடந்த 1911-ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் வெட்டப்பட்டது. இந்த வாய்க்காலுக்கு கோனேரிபாளையத்தில் உள்ள கோனேரி ஆற்றில் தடுப்பு சுவர் எழுப்பி தண்ணீர் விடப்பட்டது. அந்த தண்ணீர் வாய்க்கால் மூலம் துறையூர் சாலை வழியாக, பெரம்பலூர் பழைய நகராட்சி அலுவலகம் அருகே உள்ள தெப்பக்குளத்திற்கு வந்து, பின்னர் எஞ்சிய தண்ணீர் பெரம்பலூரில் உள்ள ஏரிகளுக்கு சென்று, அதனை சுற்றியுள்ள விவசாய நிலங்கள் பயன்பெற்று வந்தது. ஆனால் தற்போது அந்த ஜார்ஜ் வாய்க்கால் தூர்ந்து போய் உள்ளது. மேலும் ஜார்ஜ் வாய்க்கால் வெட்டியதற்கான அரணாரை விலக்கு பகுதியில் நடப்பட்டிருந்த கல்வெட்டும் சாலை விரிவாக்க பணியினால் பிடுங்கி எறியப்பட்டதால் அது மண்ணில் புதைந்து விட்டது. எனவே மாவட்ட நிர்வாகம் ஜார்ஜ் வாய்க்காலை தூர்வாரவும், மண்ணில் புதைந்துள்ள கல்வெட்டை எடுத்து பாதுகாப்பாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட 21-வது வார்டில் உள்ள அப்புசாமி நகரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதிக்கு மாதந்தோறும் மூன்று முறை காவிரி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஆனால் தற்போது 50 நாட்கள் ஆகியும் காவிரி தண்ணீர் வரவில்லை. இதனால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றோம். எனவே எங்கள் பகுதிக்கு காவிரி தண்ணீர் உடனடியாக கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 247 மனுக்களை கலெக்டர் சாந்தா பெற்றுக்கொண்டார். அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள், மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு கலெக்டர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், மாவட் திட்ட அலுவலர் தெய்வநாயகி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சக்திவேல், உதவி ஆணையர் (கலால்) ஷோபா உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×