search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மூடப்படாத கிணற்றில் விழுந்து பலியான சுந்தரராஜன் உடலை மீட்கும் தீயணைப்பு வீரர்கள்
    X
    மூடப்படாத கிணற்றில் விழுந்து பலியான சுந்தரராஜன் உடலை மீட்கும் தீயணைப்பு வீரர்கள்

    மூடப்படாமல் கிடந்த, 25 அடி ஆழ கிணற்றில் விழுந்து தொழிலாளி பலி

    நாகர்கோவில் அருகே மூடப்படாமல் கிடந்த, 25 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    என்.ஜி.ஓ.காலனி:

    நாகர்கோவில் அருகே உள்ள மணக்குடி மணவாளபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரராஜன் (வயது49). கூலித்தொழிலாளி.

    சுந்தரராஜன் வீட்டில் மாடுகள் வளர்த்து வந்தார். தினமும் மாடுகளுக்கு புல் அறுக்க அருகில் உள்ள காட்டுப்பகுதிக்குச் செல்வார்.

    நேற்று மாலையும் வழக்கம் போல புல் அறுக்க காட்டுப்பகுதிக்குச் சென்றார். நீண்ட நேரமாகியும் சுந்தரராஜன் வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் பதறிப்போனார்கள். அவர்கள் சுந்தரராஜனை அந்த பகுதி முழுவதும் தேடினர்.

    இன்று காலையில் சுந்தரராஜன் புல் அறுக்கச் சென்ற காட்டுப்பகுதிக்கு சென்று தேடினர். அங்கு மூடப்படாத பாழும் கிணறு ஒன்று இருப்பதை கண்டனர். அந்த கிணறு 3 அடி அகலத்தில் 25 அடி ஆழத்தில் காணப்பட்டது. தரையோடு தரையாக இருந்த கிணற்றிற்கு பக்க சுவர்கள் எதுவும் இல்லை.

    கிணற்றைச் சுற்றி புல் வளர்ந்து காணப்பட்டது. அதன் அருகே சுந்தரராஜனின் வெற்றிலை பையும், புல் அறுக்க எடுத்துச் சென்ற உபகரணங்களும் கிடந்தன.

    இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கிணற்றில் எட்டிப்பார்த்தனர். அங்கு சுந்தரராஜனின் கால் செருப்பு மிதப்பதை கண்டனர்.

    இதையடுத்து சுந்தரராஜன் கிணற்றுக்குள் தவறி விழுந்திருக்கலாம், என்று கருதிய உறவினர்கள் இது பற்றி சுசீந்திரம் போலீசாருக்கும், நாகர்கோவில் தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

    சுசீந்திரம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகன், ஏட்டு ஜெனமேஜெயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    இது போல நாகர்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் துரை தலைமையில் 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் அங்கு வந்தனர். அவர்கள் கிணற்றுக்குள் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இதில் சுந்தரராஜன் கிணற்றுக்குள் பிணமாக கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் கயிறு மூலம் மேலே எடுத்து வந்தனர். சுந்தரராஜன் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    திருச்சி அருகே மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து குழந்தை ஒன்று இறந்த பின்னர் மாநிலம் முழுவதும் உள்ள பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது.

    அதன்படி பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தரைமட்ட தண்ணீர் இன்றி பயன்படுத்தாமல் உள்ள பாழும் கிணறுகளையும் மூட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    சுந்தரராஜன் பாழும் கிணற்றில் விழுந்து பலியான சம்பவம் அறிந்து மணவாளபுரம் மட்டுமின்றி சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் அவர் பலியான காட்டுப்பகுதியில் திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×