search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    வேலை கேட்பதுபோல் நடித்து தாயுடன் கொள்ளையில் ஈடுபட்ட மகன் கைது

    வளசரவாக்கம் அருகே வேலை கேட்பதுபோல் நடித்து தாயுடன் கொள்ளையில் ஈடுபட்ட மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போரூர்:

    வளசரவாக்கம், வேலன் நகர் 8-வது தெருவைச் சேர்ந்தவர் அபுபக்கர். இவர் கடந்த மாதம் 22-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் ஆஸ்பத்திரிக்கு சென்றார். மாலையில் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 4பவுன் நகை மற்றும் 50ஆயிரம் ரொக்கம் கொள்ளைபோனது.

    இதேபோல அதே பகுதி காரம்பாக்கம் ராஜேஸ்வரி நகர் 2-வது தெருவைச் சேர்ந்த கவுரி என்பவர் வீட்டில் 3½ பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் கொள்ளை போனது.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து வளசரவாக்கம் உதவி கமி‌ஷனர் மகிமைவீரன் மற்றும் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அமுதா ஆகியோர் விசாரணை நடத்தினர். கொள்ளை நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அதில் வாலிபர் ஒருவர் பெண்ணுடன் வந்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

    மேலும் அவர்கள் வளசரவாக்கம் பகுதியில் வேலை கேட்டு சில அலுவலகங்களுக்கு நேரில் சென்று அங்கு செல்போன் எண்ணை கொடுத்துவிட்டு சென்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து அந்த செல்போன் எண்ணை ஆய்வு செய்த போது சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கல்வாய் பொட்டல் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பதும், அவர் தனது தாய் சாந்தியுடன் வந்து வேலை கேட்பது போல நடித்து பூட்டிக்கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு கைவரிசை காட்டி கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    அவர்கள் 2 பேரையும் போலீசார் காரைக்குடியில் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7½ பவுன் நகைகள் மற்றும் பணம் ரூ.75ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைது செய்யப்பட்ட இருவர் மீதும் சிவகங்கை, காரைக்குடி பகுதியில் பல்வேறு கொள்ளை வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×