search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைமை ஆசிரியர் சீனிவாசன்
    X
    தலைமை ஆசிரியர் சீனிவாசன்

    மாணவர்களுக்கு பேஷனாக முடி வெட்ட வேண்டாம்- சலூன் கடைக்காரர்களுக்கு தலைமை ஆசிரியர் வேண்டுகோள்

    மாணவர்களுக்கு பேஷனாக முடி வெட்ட வேண்டாம் என சலூன் கடைக்காரர்களுக்கு தலைமை ஆசிரியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    தென்காசி:

    இந்தியாவின் வருங்கால மருத்துவர்கள், என்ஜினீயர்கள், கலெக்டர்கள், விஞ்ஞானிகள் என பலரை உருவாக்குவதில் முக்கிய இடம் ஆசிரியர்களையே சாரும். வெறும் கல்வியை மட்டுமின்றி ஒழுக்கம், நன்னடத்தை, பெரியோர்களிடம் நடந்து கொள்ளும் முறை போன்வற்றையும் கற்று தருவதில் ஆசிரியர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது.

    ஒரு மாணவன் வீட்டில் இருப்பதை விட அதிக நேரம் பள்ளியில் தான் இருக்கின்றான். எனவே தான் ஆசிரியர்களுக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் இந்திய அரசு முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறது. மாணவர்களின் ஒழுக்கத்தையும், கல்வியையும் கற்றுத்தருபவை பள்ளிகள்.

    தற்போது திரும்பிய பக்கமெல்லாம் தனியார் பள்ளிகள் உள்ளது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசு பள்ளிகளே முதன்மை பெற்று திகழ்ந்தன. அங்கு படித்தவர்கள் பல முக்கிய பதவிகளில் இன்றும் கோலோச்சியுள்ளனர். தற்போதும் தனியார் பள்ளிகள் அதிகளவில் இருந்தாலும், அவைகளுக்கு சவால்விடும் வகையில் அரசு பள்ளிகள் உள்ளது என்பது உண்மையே.

    தமிழக பள்ளிக் கல்வித்துறை மாணவர்களிடம் ஒழுக்கத்தை மேம்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் சமுதாய ரீதியிலான நிற கயிறுகளை மாணவர்கள் கையில் கட்டி வரக்கூடாது, அந்த நிறத்தில் நெற்றியில் திலகமிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை ஆசிரியர்கள் மற்றும் அவர்களது தகவலின்பேரில் போலீசாரும் கண்காணித்து வருகின்றனர்.

    சலூன் கடைக்காரர்களுக்கு தலைமை ஆசிரியர் சீனிவாசன் அனுப்பியுள்ள கடிதம்.

     

    இந்த நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களது தலை முடியில் கோடு போடுதல், பாக்ஸ் கட்டிங், ஒன் சைடு கட்டிங், வி-கட், ஸ்பைக் கட்டிங் என வித்தியாசமாக தலைமுடியை ‘கட்டிங்’ செய்து கொள்வது தற்போது பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. அந்த தோற்றத்தில் மாணவர்களை நாம் பார்க்கும் போது மாணவர்கள் போன்று நமக்கு தெரிவதில்லை.

    இதனை கட்டுப்படுத்தவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள மேலகரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் வித்தியாசமான முயற்சியை மேற் கொண்டுள்ளார். அவர் ஒரு வேண்டுகோள் கடிதத்தை தயார் செய்து, அதனை அந்த பகுதியில் உள்ள சலூன் கடைகளுக்கு அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    மாணவர்களுக்கு ஒழுக்கத்தை மேம்படுத்துவது ஆசிரியர்களை மட்டும் சார்ந்த வி‌ஷயமல்ல. இதில் நம் சமூகத்துக்கும் தொடர்பு உள்ளது. அதில் சிகை அலங்கார நிபுணர்களாகிய நீங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றீர்கள். உங்களின் செயல்பாடே மாணவர்களின் அகத்தையும், புறத்தையும் அழகுறச் செய்கிறது.

    உங்களுக்கு எம் ஆசிரியர் சமூகத்தின் சார்பாக வாழ்த்துக்கள். ஓர் சிறு கோரிக்கை, பள்ளி மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, “முடியில் கோடு போடுதல், பாக்ஸ் கட்டிங், ஒன் சைடு, வி-கட், ஸ்பைக்” போன்றவற்றை போடுவதை தவிர்த்து பள்ளிக்கூட சூழலுக்கு ஏற்றது போல் அவர்களுக்கு வழக்கமான சிகை அலங்காரம் செய்து கொடுக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

    இது மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்த உதவும். வாருங்கள், ஒற்றுமையோடு ஒன்று பட்டு புதிய தேசத்தை உருவாக்குவோம். அன்புடன் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், அரசு மேல்நிலைப்பள்ளி, மேலகரம்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த வேண்டுகோள் கடிதம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    Next Story
    ×