search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஜினிகாந்த்
    X
    ரஜினிகாந்த்

    இந்த பிறந்தநாளிலாவது கட்சி தொடங்குவாரா ரஜினி? -ரசிகர்கள் எதிர்பார்ப்பு

    தொடர்ந்து அரசியல் கருத்துகளை வெளியிட்டு வரும் நடிகர் ரஜினிகாந்த், இந்த பிறந்தநாளிலாவது கட்சி தொடங்குவாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

    25 ஆண்டுகால காத்திருப்புக்கு கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரஜினிகாந்தே முற்றுப்புள்ளி வைத்தார்.

    தனக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்கள் முன்னிலையில் தனது அரசியல் வருகையை உறுதி செய்தார்.

    தனிக்கட்சி தொடங்கி  234 தொகுதிகளிலும் நிற்க போவதாக அறிவித்தார். அதன் பின் அவரது அரசியல் பணிகள் வேகம் எடுத்தன. தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றியவர் அதற்கு மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் நிர்வாகிகளை நியமித்தார்.

    உறுப்பினர் சேர்க்கையையும் பூத் கமிட்டிகள் அமைக்கும் பணிகளையும் தீவிரப்படுத்தினார். ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளின் வேகமான பணிகளால் தமிழ்நாடு முழுக்க ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கவும் 66 ஆயிரம் பூத் கமிட்டிகள் அமைக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    பாராளுமன்ற தேர்தலில் களம் இறங்காத ரஜினி தனது பேட்டிகளில் ரசிகர்களை நிச்சயம் ஏமாற்ற மாட்டேன் என்றும் எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் கட்சி தொடங்கி சந்திப்பேன் என்றும் உறுதியாக தெரிவித்து வருகிறார்.

    ‘பேட்ட’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ரஜினிகாந்த் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

    உள்ளாட்சி தேர்தலில் போட்டி இல்லை என்பதையும் கட்சி தொடங்கும்வரை நடிப்பேன் என்றும் தெரிவித்துவிட்டார். எனவே ரஜினியின் அரசியல் வருகை எப்போது? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. அதேசமயம் அவரது ரசிகர்களை சோர்வடையச் செய்துள்ளது.

    ரஜினிகாந்த் திரைப்படங்களில் ஒப்பந்தமானாலும், அவரது மக்கள் மன்றத்தினரிடம் கட்சி பொறுப்புகளை நம்பி முழுமையாக ஒப்படைத்து சென்று இருக்கிறார். சில தினங்களுக்கு முன் 100 பொதுக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    கிராமம், நகரம், மாநகரம், மாநில நிர்வாகிகள் ஏற்கனவே நியமிக்கப்பட்டு இருந்தாலும் இன்னும் மன்றத்தை சத்தமின்றி வலுவாக கட்டமைத்து வருகிறார்கள். நிச்சயம் இந்த சட்டமன்றத்தேர்தலில் ரஜினி கட்சி தனித்து போட்டியிடுவது உறுதி என்கிறார்கள்.

    கட்சியை ஆரம்பித்த கையோடு கட்சி கொள்கைகள், பிரச்சாரங்களை காட்ட சொந்தமாக ஒரு தொலைக்காட்சியையும் ஆரம்பிக்க இருக்கிறார் ரஜினி. அதற்கான முன்னோட்ட பணிகளையும் இப்போதே தொடங்கி விட்டார்கள்.

    அந்த தொலைக்காட்சிக்கான அப்லிங்கிற்கு தற்போதைய டி.வி. ஒன்று உதவ முன் வந்துள்ளது. ரஜினி தொடங்க இருக்கும் சேனலுக்கு 3 பெயர்கள் தேர்வு செய்து ஒப்புதல் கேட்டு இருந்தார்கள். 3 பெயர்களில் ரஜினி டிவி என்ற பெயருக்கு ஒப்புதல் கிடைத்து விட்டதாக தகவல் வருகிறது.

    2017-ம் ஆண்டு அரசியல் அறிவிப்புக்கு பிறகு 2018-ம் ஆண்டு பிறந்த நாளில் கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்த்தனர். அதேபோல் இந்த ஆண்டும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

    ரஜினி பிறந்தநாள் அன்று அவர் நடித்துள்ள தர்பார் படத்தின் டிரெய்லர் வெளியிடவும் அதற்கு முன்பாக 8 அல்லது 9-ந்தேதி தர்பார் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடத்தவும் திட்டமிட்டு வருகிறார்கள்.

    இந்த இசை வெளியீட்டு விழாவில் கட்சி அறிவிப்பை ரஜினி வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    Next Story
    ×